சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்.!
எங்களது பிரச்சினைகளை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் இந்த நாட்டினை நல்லமுறையில் ஆட்சிசெய்யும் அவரினால் எங்களது பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுத்தர முடியும் என நம்புவதாக மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் வாவி மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களால் கவனயீர்ப்பு போராட்டம் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
கிண்ணியா கருக்குப்பனை பகுதியில் இருந்து வருகை தந்துள்ள சட்டவிரோத சுருக்குவலை தொழிலாளிகளால் தங்களது வாழ்வாதாரம் மற்றும் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்களால் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாலமுனையிலும் பூனொச்சிமுனையிலும் உள்ள சட்டவிரோத சுருக்கு வலை தொழிலாளிகளை வெளியேற்று, அடிக்காதே அடிக்காதே ஏழை மீனவரின் வயிற்றில் அடிக்காதே, கிண்ணியா கருக்குப்பனை ஊரில் உள்ள கடல் வளங்களை அழித்தது போன்று மட்டக்களப்பு கடல் வளங்களை அழிக்காதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை தொடர்பாக பல்வேறு வகையிலும் முறைப்பாடுகளை முன்வைத்தும் இதுவரைக்கும் எந்த ஒரு திணைக்களத்தினாலும் இதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்காத நிலையிலே இன்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
வெளி மாவட்டங்களில் இருந்து வருகின்ற மீனவர்களினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது சுயலாபங்களுக்காக எங்களது வளங்களை அழித்துக் கொண்டிருக்கின்றார்கள். எனவே இதற்கான தீர்வினை விரைவாக பெற்றுத்தராவிட்டால் இந்த ஆர்ப்பாட்டமானது மேலும் வலுப்பெற்று பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் என மீனவர்கள் தெரிவித்தனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களுக்கு தீர்வினை பெற்றுத்தரக்கூடிய மகஜர் ஒன்று மட்டக்களப்பு கடற்றொழில் மீனவர்களினால் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள உதவி பணிப்பாளருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், ஈ.பி.டி.பியின் இணைப்பாளர் அந்தனி ராஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






