போ@தையின் பிடியிலிருந்து இளையோரைக் காப்போம்! : பருத்தித்துறையில் விழிப்புணர்வு ஊர்வலம்
போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பருத்தித்துறை நகர சபையின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு நடைபவனியும் நாடக ஆற்றுகையும் இன்று வியாழக்கிழமை பருத்தித்துறையில் முன்னெடுக்கப்பட்டன.
“மாற்றத்தை நம்மில் இருந்து தொடங்குவோம் – போதையற்ற சமூகம் படைப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் இக்கூட்டு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இன்று காலை 8.30 மணிக்கு வேலாயுதம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமான விழிப்புணர்வு நடைபவனி, பருத்தித்துறை நகர்ப் பகுதி வரை சென்றடைந்தது.
இந்த நிகழ்வை பருத்தித்துறை நகர சபை பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸ் தலைமைதாங்கி ஒழுங்கமைத்திருந்தார்.
நடைபவனியின் நிறைவில், பருத்தித்துறை நகர்ப் பகுதியில் போதைப்பொருள் பாவனையின் சமூகத் தாக்கம் குறித்தான விழிப்புணர்வு நாடக ஆற்றுகை இடம்பெற்றது.
‘கியூமெடிக்கா’ நிறுவனத்தின் அனுசரணையில் ‘செம்முகம் ஆற்றுகைக்குழு’வினரால் மேடையேற்றப்பட்ட இந்த நாடகம், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அண்மைய காலத்தில் சமூகத்தில் இடம்பெற்று வரும் வீதி விபத்துகள், தற்கொலைகள் மற்றும் குற்றச் செயல்களுக்கு மூலகாரணமாக போதைப்பொருள் பாவனையே காணப்படுகின்றது. இது தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, இளைய சமுதாயத்தைப் போதையின் பிடியில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போலின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், பருத்தித்துறை நகர சபைச் செயலாளர் ச.பிரசாத், உப நகரபிதா தே.தேவராஜேந்திரன், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொதுச்சுகாதார பரிசோதகர்கள், டெங்குத் தடுப்புப் பிரிவினர், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச – தனியார் துறை உத்தியோகத்தர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.










