உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களை பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கில் உருவாக்கத் திட்டம்

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
69 பார்வைகள்

வடக்கு மாகாணத்தின் முக்கிய உற்பத்தித் துறைகளில் ஒன்றாக விளங்கும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேலும் மேம்படுத்துவதுடன், பால், இறைச்சி போன்ற மூலப்பொருட்களைப் பெறுமதிசேர் முடிவுப் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கு மாகாணத்திலேயே உருவாக்குவதற்கும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் சவால்கள், அதன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.பண்டார, ஆளுநரின் அழைப்பின் பேரில் இன்று (15.10.2026) வியாழக்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு வருகை தந்தார். இதன்போது நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் அண்மையில் தம்மைச் சந்தித்தபோது முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலும், வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கக்கூடிய கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையை மேம்படுத்துவது தொடர்பிலும் ஆராய்வதற்காக இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கம், மாகாண நிர்வாகம் என வேறுபாடின்றி, வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கால்நடை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதன்போது வடக்கு மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், மாகாணத்தில் கால்நடைத் துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

மாகாணத்தில் கால்நடை வைத்திய அலுவலகங்கள் உட்பட 47 நிறுவனங்களும் அலுவலகங்களும் இயங்குகின்றன. எனினும், ஆளணி வெற்றிடங்கள், பழைய வாகனங்கள், போதிய போக்குவரத்து வசதியின்மை மற்றும் நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாகச் சேவைகளை முழுமையாக முன்னெடுப்பதில் சவால்கள் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

குறிப்பாக, கால்நடை வைத்திய அலுவலகங்களில் அனுமதிக்கப்பட்ட 83 கால்நடை வைத்தியர் பணியிடங்களில் 49 பேர் மட்டுமே பணியாற்றுவதுடன், 34 பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன. மேலும், 15 கால்நடை அலுவலர் பணியிடங்களிலும் நியமனங்கள் இல்லாத நிலை காணப்படுகிறது. கால்நடை வைத்திய அலுவலகங்களுக்கான 28 வாகனங்களில் 13 வாகனங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையானவை என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.

கால்நடை நோய்களைக் கண்டறிதல், நோய்த் தொற்று தொடர்பான மாதிரிகளைச் சேகரித்தல், வெறிநாய்க்கடி நோயுடன் தொடர்புடைய விலங்குகளைக் கையாளுதல், கால்நடைகளுக்கான மருந்து விநியோகத்தை ஒழுங்குபடுத்துதல், செயற்கைக் கருவூட்டலுக்கான பொருட்களைத் தொடர்ந்து வழங்குதல் உள்ளிட்ட தொழில்நுட்பப் பிரச்சினைகளும் முன்வைக்கப்பட்டன.

கால்நடை வைத்தியர்கள் மற்றும் கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்களுக்கான பணியிடங்களை நிரப்புதல், போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், மேலதிக பணிநேரத்துக்கான கொடுப்பனவுகளை வழங்குதல், மருந்தக உதவியாளர்களுக்கான பணியிடங்களை உருவாக்குதல் மற்றும் தமிழ்மொழி மூலமான பயிற்சி வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட நிர்வாகத் தேவைப்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளரும் ஆளுநரின் ஆலோசனைக் குழுவின் இணைப்பாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர், தேசிய உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பை 10 சதவீதமாக உயர்த்தும் இலக்கை அடைவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள ஏழு முக்கிய துறைகளில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையும் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை அடைவதற்கு கால்நடைத் துறையின் உற்பத்தித் திறனை அதிகரித்தல், பண்ணையாளர்களுக்கான ஆதரவை வலுப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய திணைக்களங்களுடன் இணைந்து திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தல் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாகாணப் பணிப்பாளரால் முன்வைக்கப்பட்ட விடயங்களுக்குப் பதிலளித்த விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.பண்டார, அவற்றைத் தீர்ப்பதற்கான சாத்தியமான வழிமுறைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

கால்நடை வைத்தியர்கள் எப்போதும் பண்ணையாளர்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு செயற்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், கால்நடைகளுக்கான மருந்துகள் கால்நடை வைத்திய அலுவலகங்களின் ஊடாக ஒழுங்கான முறையில் விநியோகிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். கால்நடை அபிவிருத்திப் போதனாசிரியர்களின் பணிகள் மற்றும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பிலும் தனது கருத்துகளை முன்வைத்தார்.

வடக்கு மாகாணத்தின் கால்நடை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்குப் புதிய இனங்களை அறிமுகப்படுத்துதல், நோய்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் முறையான பண்ணை முகாமைத்துவத்தைப் பின்பற்றுதல் ஆகியவை அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2025ஆம் ஆண்டுக்கான உற்பத்திப் புள்ளிவிவரங்களின்படி, நாட்டின் மொத்த ஆட்டிறைச்சி உற்பத்தியில் வடக்கு மாகாணத்தின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. வளங்களை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் உற்பத்தியை மேலும் அதிகரிக்க முடியும் என்றும் கலந்துரையாடப்பட்டது.

கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களின் பற்றாக்குறையைத் தீர்ப்பதுடன், மேய்ச்சல் நிலங்களை மட்டும் நம்பியிருக்காமல், கால்நடைகளுக்குப் பொருத்தமான புல் வகைகளைப் பயிரிட்டு, அவற்றை அறுவடை செய்து தீவனமாக வழங்கும் முறைகளை ஊக்குவிப்பதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது.

பால் மற்றும் இறைச்சி ஆகியவற்றை மூலப்பொருட்களாக வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வதற்குப் பதிலாக, அவற்றைப் பதப்படுத்திப் பெறுமதிசேர் பொருட்களாக மாற்றும் தொழிற்சாலைகளை வடக்கு மாகாணத்தில் உருவாக்க வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது. இதற்காகப் புதிய தொழில்நுட்பங்களையும் புத்தாக்க முயற்சிகளையும் ஊக்குவித்தல், முதலீட்டாளர்களை ஈர்த்தல் மற்றும் உற்பத்திப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், ஒவ்வொரு மாவட்டத்திலும் கால்நடை வைத்தியசாலைகளை அமைப்பது, பண்ணையாளர்களின் இடங்களுக்கே சென்று சேவைகளை வழங்குவதற்கான நடமாடும் கால்நடை வைத்திய வாகன வசதிகளை ஏற்படுத்துவது மற்றும் கால்நடைத் தீவனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை உருவாக்குவது தொடர்பான யோசனைகளை முன்வைத்தார்.

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் கால்நடைத் திருட்டு, சட்டவிரோதமாகக் கால்நடைகளை இறைச்சிக்காகக் கொல்வது உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இவ்வாறான பிரச்சினைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், விவசாய அமைச்சின் செயலாளர், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், மாவட்டப் பிரதிப் பணிப்பாளர்கள், மாவட்டச் செயலர்களின் பிரதிநிதிகள் மற்றும் ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பில் லிட்ரோவின் அவசர அறிவித்தல்!

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகப் பிரச்சினை தொடர்பாக லிட்ரோ (Litro) எரிவாயு நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்பட்டுள்ள விநியோகத் தடைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்குத் தேவையான…

62 0 0
இலங்கை செய்திகள்

காவந்திஸ்ஸ யானை உயி@ரிழந்தது!

அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்ட காவந்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளது. நோய்வாய்ப்பட்டிருந்த அந்த யானை, இன்று (16) காலை சியம்பலன்கமுவ பகுதியில் சரிந்து விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. கல்கமுவ பகுதியில்…

82 0 0
இலங்கை செய்திகள்

வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பெற்றுக்கொள்ள வேண்டிய மேலதிக சிகிச்சைகளுக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு கோரி, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கொழும்பு…

84 0 0
இலங்கை செய்திகள்

பேரினவாதத்தைத் தோற்கடிப்பதற்காக ஒன்றுபடுகின்ற ஒரு காலகட்டமாக இன்றைய காலம் இருக்கிறது! : ரிஷாட் எம்.பி தெரிவிப்பு!

பேரினவாத சக்திகள் இந்த நாட்டை ஆட்சி செய்வதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய அதிகாரத்தை கையில் எடுப்பதற்கு, பேரினவாத சக்திகள் இந்த நாட்டினுடைய நீதி மன்றங்களில் கை…

92 0 0