முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!
தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தெல்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது 21 முதல் 40 வயதிற்கு இடைப்பட்ட கெலியோய, அலுத்வத்தை, வரக்காபொலை, பேராதனை, அம்பிட்டிய, கண்டி மற்றும் ஹங்குரன்கெத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், 22 முதல் 43 வயதிற்கு இடைப்பட்ட பல்லேகல, பேராதனை, ஹங்குரன்கெத்த, தெஹிவளை மற்றும் கட்டுக்கஸ்தோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 947 மில்லிகிராம் கஞ்சா, 1 கிராம் 276 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 18 போதை மாத்திரைகள், 3 கிராம் 657 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள், 21 சட்டவிரோத சிகரெட்டுகள், 500 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 35 பியர் கேன்கள் மற்றும் 750 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 13 மதுபான போத்தல்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.