முச்சக்கரவண்டியும் 4 உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி கோர விபத்து.!
பருத்தித்துறை – தும்பளை வீதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் நான்கு உந்துருளிகளும் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானதில் 4 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளமையுடன், அவரது தாய் மற்றும் தந்தையரும் காயங்களுக்குள்ளாகிப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை – தும்பளை வீதியில் மணியாரம் சந்திக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பருத்தித்துறையிலிருந்து தும்பளை நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், பருத்தித்துறை நோக்கிப் பயணித்த உந்துருளிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. விபத்தில் சிக்கிய உந்துருளியில் பயணித்தவர்கள் வீதியில் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் மிக நெருக்கமாகப் பயணித்த ஏனைய மூன்று உந்துருளிகளும் அடுத்தடுத்து விபத்துக்குள்ளான உந்துருளிகளுடன் மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இளம் குடும்பத்தினர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். 4 வயது சிறுவனுக்குப் பலத்த காயமேற்பட்டுள்ளமையுடன், அவரது தாய், தந்தையரும் காயங்களுக்குள்ளான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி, பிள்ளை ஆகியோரே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அருகருகே இரண்டு உந்துருளிகள் பயணித்த நிலையில், அவற்றை முந்திச் சென்ற உந்துருளி எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மிக நெருக்கமாக நான்கு உந்துருளிகள் வீதியை ஆக்கிரமித்துப் பயணித்தமையும், அதிக ஒளிர்திறன் கொண்ட முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டவாறு பயணித்தமையுமே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை பொலிஸார், விபத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டி சாரதியைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளமையுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, பருத்தித்துறை மெத்தக்கடை சந்தியிலிருந்து மணியாரம் சந்தி வரையான தும்பளை வீதி மிகவும் குறுகலாகக் காணப்பட்டு வருகின்ற நிலையில், பருத்தித்துறை – பொற்பதி அரச பேருந்து சேவை உள்ளிட்ட கனரக வாகனங்களும் அதிகமாகப் பயணித்து வருகின்றமை எப்போதும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி வருவதாகப் பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்தப் பகுதியில் விபத்து அபாயம் காணப்பட்டு வருகின்றமை பல தடவைகள் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இதுபோன்ற கோர விபத்துகள் இந்தப் பகுதியில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



