செத்தல் மிளகாயின் விலை அதிகரிக்கும் அபாயம்.!
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் களஞ்சியசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள செத்தல் மிளகாய் கொள்கலன்களை விடுவிப்பதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எதிர்வரும் காலங்களில் உள்நாட்டுச் சந்தையில் ஒரு கிலோகிராம் செத்தல் மிளகாயின் மொத்த விலை ரூ. 2,500 ஐக் கடக்கும் அபாயம் உள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் பி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளதாவது,
சுங்கத் திணைக்கள களஞ்சியசாலைகளில் தற்போது சுமார் 120 செத்தல் மிளகாய் கொள்கலன்கள் விடுவிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இறக்குமதியாளர்கள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து, சுங்கத் தீர்வை உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்தி, பரிசோதனை நடவடிக்கைகளையும் நிறைவு செய்துள்ள போதிலும், தரக்கட்டுப்பாட்டு அளவுகோல்கள் தொடர்பான சிக்கலினால் இவை விடுவிக்கப்படவில்லை.
முன்னர் ஒரு கிலோகிராம் சுமார் ரூ. 1,050 ஆக விற்பனை செய்யப்பட்ட செத்தல் மிளகாயின் விலை தற்போது ஏறத்தாழ ரூ. 2,000 ஆக அதிகரித்துள்ளது.
உடனடியாகத் தீர்வு காணப்படாவிட்டால் சந்தையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலை ரூ. 2,500 ஐக் கடக்கும்.
மூலப்பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள கடுமையான தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் உள்ள பல மிளகாய்த்தூள் உற்பத்தித் தொழிற்சாலைகள் தமது உற்பத்தி நடவடிக்கைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், இதனால் வர்த்தகர்களுக்குப் பாரிய நிதி இழப்புகள் ஏற்பட்டுள்ளது.
சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டையும் விலை உயர்வையும் கட்டுப்படுத்தும் வகையில், சுங்கத்தில் தேங்கியுள்ள செத்தல் மிளகாய் கையிருப்புகளை விரைவாக விடுவிப்பதற்கான அவசர பொறிமுறையொன்றை அரசாங்கம் உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டும்.


