உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

வடக்கு மாகாண சபைக்கான மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமை பயிற்சிப் பட்டறை.!

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
67 பார்வைகள்

அரச கொள்வனவு என்பது ஒரு நிர்வாக நடைமுறை மாத்திரமல்ல, மக்களுக்காக ஒதுக்கப்படும் பொது நிதியை வீதிகள், கட்டடங்கள், சுகாதாரச் சேவைகள், கல்வி வசதிகள், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஏனைய பொதுச் சேவைகளாக மாற்றும் முக்கியப் பொறிமுறையாகும். எனவே, பெறுகை நடவடிக்கைகளில் ஏற்படும் ஒவ்வொரு தாமதமும் நேரடியாக மக்களுக்கான சேவை வழங்கலையும் மாகாண அபிவிருத்தியையும் பாதிக்கும் நிலையில், மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையை வெறுமனே ஒரு இணையக் கருவியாக அல்லாது, வெளிப்படையானதும், நேர்த்தியானதும், பொறுப்புக்கூறலுடனானதுமான கொள்வனவுக் கலாசாரத்தை உருவாக்கும் நிர்வாகக் கருவியாக மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண சபைக்கான மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமைப் பயிற்சிப் பட்டறை இன்று (01.09.2026) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள உள்ளூராட்சி திணைக்களப் பயிற்சி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் சிறப்புரையாற்றியதுடன், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் தலைவர், பொதுச் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வளவாளர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் தலைவர் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் நான் மாவட்ட செயலராகப் பணியாற்றிய காலத்தில் பணியாற்றியவர். மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவர். மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையை மாகாண சபைகளுக்கு விரிவுபடுத்தி, பயிற்சியை நடத்துவதற்காக தேசிய பெறுகை ஆணைக்குழுவுக்கும், இம் முக்கிய தேசிய முயற்சியை அறிமுகப்படுத்துவதில் ஒத்துழைத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்துக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

பொது நிதியின் ஒவ்வொரு ரூபாவும் அங்கீகரிக்கப்பட்ட பொது நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு, எதிர்பார்க்கப்படும் பயன் உரிய காலத்துக்குள் மக்களைச் சென்றடைய வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், சிறந்த பெறுகை நடைமுறை வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், நியாயம், போட்டித்தன்மை, வினைத்திறன் மற்றும் பணத்துக்கான பெறுமதி ஆகிய அடிப்படைகளில் அமைய வேண்டும், என்றார்.

மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையின் மூலம் கொள்வனவு நடவடிக்கைகள் ஒருங்கிணைந்த மின்னணு தளத்தில் பதிவு செய்யப்படுவதால், பொறுப்பான அதிகாரிகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்வோர் ஒவ்வொரு கொள்வனவின் தற்போதைய நிலை, காலவரையறைகள் மற்றும் ஏற்படும் தாமதங்களைத் துரிதமாக அடையாளம் கண்டு உரிய கட்டத்தில் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறிப்பாக, ஒரு பெறுகை நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே காணி கிடைப்புத் தன்மை, வடிவமைப்புகள், தொழில்நுட்ப விபரக் குறிப்புகள், மதிப்பீடுகள், சுற்றாடல் அனுமதிகள் மற்றும் நிர்வாக அனுமதிகள் போன்ற அத்தியாவசிய விடயங்கள் நிறைவு செய்யப்பட்டிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், இவை பூர்த்தி செய்யப்படாத காரணத்தாலேயே பல பெறுகை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இதனால் தயார்நிலைத் திட்டம் வினைத்திறனுடன் பயன்படுத்தப்பட்டு, தவிர்க்கக்கூடிய தடைகளின்றி ஒவ்வொரு கொள்வனவும் முன்னெடுக்கத் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அங்கீகரிக்கப்பட்ட பெறுகைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும் என்றும், திட்டமிடப்பட்ட திகதிகளுக்கும் உண்மையான முன்னேற்றத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை உடனடியாகக் கண்டறிந்து, காரணங்களை ஆராய்ந்து உரிய திருத்த நடவடிக்கைகளை நிதியாண்டின் இறுதி வரை காத்திருக்காமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாண சபையின் கீழுள்ள அனைத்து அமைச்சுக்கள், திணைக்களங்கள், சட்டபூர்வ நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களும் மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட ஆளுநர், பொருத்தமான அதிகாரிகளைப் பொறுப்புக்கூறச் செய்து, துல்லியமான தகவல்களை வழங்கி, பெறுகை முன்னேற்றத்தைத் தொடர்ந்து மீளாய்வு செய்யுமாறும் பொறுப்பான அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மாகாண ஒருங்கிணைப்பு அலுவலர், தேசிய பெறுகை ஆணைக்குழுவுடனான ஒருங்கிணைப்பிலும் மாகாண நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுவார் எனக் குறிப்பிட்ட ஆளுநர், அனைத்து நிறுவனங்களும் தேவையான தகவல்களையும் ஒத்துழைப்பையும் காலதாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பிரதம செயலாளரின் வரவேற்புரை, ஆளுநரின் சிறப்புரை, நாளின் நோக்கம் மற்றும் குறிக்கோள்கள் தொடர்பான விளக்கம், தேசிய பெறுகை ஆணைக்குழுத் தலைவரின் முக்கிய உரை, கொள்வனவு கண்காணிப்பின் முக்கியத்துவம் மற்றும் மின்னணு பெறுகை கண்காணிப்பு முறைமையின் பங்கு தொடர்பான விளக்கம், முறைமை அறிமுகம், தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் கலந்துரையாடல் அடிப்படையிலான கேள்வி – பதில் அமர்வு உள்ளிட்டவை இடம்பெற்றன.

நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய பெறுகை ஆணைக்குழுத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அதிகாரிகள், தேசிய பெறுகை ஆணைக்குழுவின் வளவாளர்கள் மற்றும் டெக்ரீக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம்

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் (UAE) இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், வெளிவிவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய…

36 0 0
இலங்கை செய்திகள்

நிதி மோசடி – கேகாலை நகர சபை உறுப்பினர் விளக்கமறியலில்!

கபானா திட்டமொன்றை முன்னெடுப்பதாகக் கூறி 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கேகாலை மாநகர சபை உறுப்பினர் ஒருவரை…

18 0 0
இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

48 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

69 0 0