மரம் வெட்டிக்கொண்டிருந்த நபருக்கு நேர்ந்த துயரம்.!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் மரம் வெட்டிக்கொண்டிருந்த நபர் மீது பாரிய கிளையொன்று ஒன்று முறிந்து விழுந்ததில் அவர் உயிரிழந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) மாலை இடம்பெற்றதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேற்பிரிவு தோட்டப் பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோதே, மரத்தின் பாரிய கிளையொன்று முறிந்து மரம் வெட்டிக்கொண்டிருந்தவரின் தலைப்பகுதியில் விழுந்துள்ளது.
இதனால் காயங்களுக்கு உள்ளான நபர் பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த நபர் 52 வயதுடைய, கண்டி பகுதியை சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் எடுத்து வருகின்றனர்.