உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
22 புதன்

தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சியை வடக்கு ஆளுநர் பாராட்டு!

இலங்கை செய்திகள் 4 மணி நேரம் முன்
72 பார்வைகள்

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது, என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார்.

இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த வணிக இணைப்புக் கருத்தரங்கு, யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (22.07.2026) புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விசேட உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆளுநர் தமது உரையில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாணத்தின் பல வளங்கள் இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதுடன், பயன்படுத்தப்படும் வளங்களினூடான உற்பத்திகளுக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

விவசாயம் மற்றும் கடல்வளம் என்பன எமது மாகாணத்தின் தனிப்பெரும் வளங்களாக உள்ளபோதிலும், விவசாய உற்பத்திகளைச் சேமித்து வைப்பதற்கோ அல்லது அவற்றைப் பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கோ போதிய வசதிகள் இங்கு இல்லை.

இவ்வாறானதொரு பின்னணியில், சந்தைப்படுத்தலில் எமது உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வுகாண இத்தகைய வணிக இணைப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் தொடர்ந்தும் அதே நிலையிலேயே தேங்கி நிற்காமல், அவர்கள் வளர்ச்சி கண்டு ஏற்றுமதியாளர்களாக உருவெடுக்க வேண்டும். அதற்காக எம்மால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். முயற்சியாளர்களும் இந்த இலக்கை முழுமூச்சாகக் கொண்டு தங்களது பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிநாடுகளுக்கு எமது உற்பத்திகளை நேரடியாக ஏற்றுமதி செய்வதற்கான செயன்முறை ரீதியான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் உரிய திணைக்களங்களின் சாதகமான ஒருங்கிணைப்பும் எமக்குக் கிடைத்து வருகின்றது. சாத்தியமானளவு மிக விரைவில் இது நடைமுறைக்கு வரும்.

நாட்டின் பொருளாதார முதுகெலும்பாகச் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களே திகழ்கின்றனர். எமது வடக்கு மாகாணத்தில், யாழ்ப்பாணம் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலும் இவர்களுக்கான பிரத்தியேக கைத்தொழில் பேட்டைகள் இல்லை.

சில தினங்களுக்கு முன்னர் இங்கு வருகைதந்திருந்த கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்திப் பிரதி அமைச்சர் கௌரவ சதுரங்க அபயசிங்கவிடம் இது தொடர்பில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன். அவர் ஏனைய மாவட்டங்களிலும் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை வளர்த்தெடுக்கும் பணிகளை நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம். இவ்வாறான வணிக இணைப்பு முயற்சிகள் நிச்சயமாக அவர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும்,’ எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், இலங்கை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் கௌசல் ராஜபக்ச, கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் எஸ்.சிவகெங்காதரன், இந்தியத் துணைத்தூதரக அதிகாரி, கைத்தொழில் முயற்சியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைத்துத் தறுமாறு ரவிகரன் எம்.பி. கோரிக்கை

பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் கட்டடம் அமைக்கக்கோரி வெகுசன ஊடக பிரதி அமைச்சரிடம் துரைராசா ரவிகரன் எம்.பி. கோரிக்கை பருத்தித்துறை அஞ்சல் நிலையத்திற்கு நிரந்தரக் காணியை உறுதிப்படுத்தி,…

45 0 0
இலங்கை செய்திகள்

யாழில் 50ற்கும் அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி திடீரென உயிரிழப்பு!

யாழில் பேருந்து செலுத்தியவாறே சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது. இதன்போது புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தை சேர்ந்த முருகேசு ரமேஷ் (வயது 58) என்பவரே இவ்வாறு…

30 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு!

மன்னார் மாவட்டத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இன்று (22) மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இலங்கை தகவல்…

36 0 0
இலங்கை செய்திகள்

யாழ் ராணிக்கு வயது நான்கு!

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் யாழ் ராணி புகையிரதத்தில் நாளார்ந்தம் பயணம் செய்யும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் நான்காவது ஆண்டு…

70 0 0