எல்பிட்டிய பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது கூர்மையான ஆயுதத்தால் தாக்குதல் நடத்தி, கைவிலங்குடன் சந்தேக நபர் தப்பியோடியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் கஹதுவ பகுதியில் விசேட சோதனைக்காக சென்ற போது, அங்கிருந்த சந்தேக நபர்கள் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் வான்நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோட முயன்ற வேளையில், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் அவர்களை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துக் கைது செய்ய முயன்ற போது, அதில் ஒரு சந்தேக நபர் தான் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாகக் செயற்பட்ட மற்றைய பொலிஸ் அதிகாரி சந்தேக நபரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சந்தேக நபரின் கையில் தோட்டா பாய்ந்து காயமேற்பட்டது. காயமடைந்த சந்தேக நபருக்கு பொலிஸார் உடனடியாகக் கைவிலங்கிட்டனர்.
எனினும், அந்த இடத்திற்கு திடீரென வந்த பிறிதொரு கும்பல், கைவிலங்குடன் இருந்த சந்தேக நபரை பொலிஸாரிடமிருந்து வலுக்கட்டாயமாக மீட்டு தப்பியோடியுள்ளது.
தப்பியோடியுள்ள நபர் படுகொலைச் சம்பவம் ஒன்றிற்கு உறுதுணையாக இருந்தமை உட்பட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூர்மையான ஆயுதத் தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தப்பியோடிய சந்தேக நபரை மீண்டும் கைது செய்வதற்காகப் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.










