நபர் ஒருவரைக் கடத்திச் சென்று, காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ரண்பொகுணுகம, நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நாரங்கஸ்பிட்டிய – கிரிந்திவெல பகுதியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த 2018 செப்டம்பர் 09ஆம் திகதி கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.
இது குறித்து பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்று திங்கட்கிழமை 08 ஆம் திகதி நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரண்பொகுணுகம பகுதியில் வைத்து இந்த குற்றச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட, பேனா வடிவிலான சிறிய ரக துப்பாக்கி – 01, அதற்குப் பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் – 05, ரி-56 ரக தோட்டாக்கள் – 04, 9 மில்லிமீற்றர் ரக தோட்டாக்கள் – 08, 12 போரா ரக தோட்டாக்கள் – 02 என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










