உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

டெங்கு அபாயம் தீவிரம் – கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டம் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
18 பார்வைகள்

நாட்டின் 14 மாவட்டங்களில் டெங்கு பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான 3 நாள்கள் விசேட டெங்கு ஒழிப்புச் செயற்றிட்டம் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை முதல் இந்த விசேட தூய்மைப்படுத்தல் மற்றும் சோதனையிடும் நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வைத்தியர் கபில கன்னங்கர,

“கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், நாட்டின் 14 மாவட்டங்களிலுள்ள 72 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50% முதல் 55% வரை அதிகரித்துள்ளதுடன், இதுவரை 20 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளன.

மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்கள், தென் மாகாணத்தில் மாத்தறை, காலி மாவட்டங்கள், மத்திய மாகாணத்தில் நுவரெலியா மற்றும் சபரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே இந்த நோய் பரவல் தற்பொழுது மிகத் தீவிரமாக அதிகரித்து வருகின்றது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட லார்வாப் புழுக்கள் தொடர்பான ஆய்வுகளின்படி, மனிதர்களால் கைவிடப்படும் மற்றும் அலட்சியமாக வீசப்படும் பொருள்களிலேயே டெங்கு நுளம்புகள் அதிகமாகப் பெருகுவது கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாகப் பாடசாலை வளாகங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவன வளாகங்கள் மற்றும் பொதுமக்கள் வாழும் வீட்டு வளாகங்கள் ஆகியவற்றில் நுளம்புப் பெருக்கம் அதிகளவில் அவதானிக்கப்பட்டுள்ளது.

ஐஸ்கிரீம் கோப்பைகள், இளநீர் கோம்பைகள், வெற்று டின்கள் மற்றும் பொலித்தீன் பைகள் போன்ற 10 மில்லிலீற்றருக்கும் அதிகமான சுத்தமான நீர் தேங்கி நிற்கக்கூடிய எந்தவொரு இடத்திலும் ‘ஈடிஸ்’ வகை நுளம்புகள் பெருகுகின்றன.

கடந்த வருடத்தில் ‘டெங்கு வைரஸ் வகை 3’ அதிகமாகக் காணப்பட்ட நிலையில், இவ்வருடம் ‘டெங்கு வைரஸ் வகை 2’ மிக வேகமாகப் பரவி வருகின்றது.

இதன் காரணமாகப் பொதுமக்களின் இயல்பான நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாகக் காணப்படுவதால், நோய் உடனே தீவிரமடையும் அபாயம் உள்ளது. இது கடுமையான குருதிப்போக்கு மற்றும் அதிர்ச்சி நிலை போன்ற உயிராபத்தான நிலைகளுக்கு இட்டுச்செல்லக்கூடும்.” – என்றார்.

இன்று காலை ஆரம்பமான விசேட சோதனை நடவடிக்கைகளில் கொழும்பு மாநகர சபை அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள், முப்படைகளின் சிப்பாய்கள், சுற்றாடல் பொலிஸார் மற்றும் புகை விசிறல் உதவியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

தலா மூன்று பேரைக் கொண்ட குழுக்களாகப் பிரிந்து, கொழும்பு பொது வைத்தியசாலை வளாகம், மருதானை, பொரள்ளை போன்ற மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் உள்ள வளாகங்களை இக்குழுவினர் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.

இந்த விசேட களப்பணி அடுத்த இரண்டு நாள்களுக்கும் தொடரவுள்ளதுடன், இந்நிகழ்வில் கொழும்பு மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் வைத்தியர்கள் பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

டெங்கு நுளம்புகள் 100 முதல் 200 மீற்றர் தூரம் வரை பறக்கக்கூடியவை என்பதால், பொதுமக்கள் தமது வீடு மட்டுமன்றி அருகிலுள்ள பாழடைந்த காணி மற்றும் சுற்றுப்புறங்களையும் தூய்மையாக வைத்திருக்க வாரத்தில் 30 நிமிடங்களை ஒதுக்குமாறு வைத்தியர் கபில கன்னங்கர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்தோடு, இரண்டு நாள்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால், மூன்றாவது நாளில் உடனடியாகத் தகுதிவாய்ந்த மருத்துவரை நாடுமாறு அல்லது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தாமதமாகச் சிகிச்சையளிப்பதே பெரும்பாலான மரணங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளதால், இரத்தப் பரிசோதனை மூலம் அது டெங்கு காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்தி, மருத்துவர்களின் ஆலோசனைகளை முழுமையாகப் பின்பற்றுமாறு பொதுமக்கள் அவசரமாகக் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்!

வடமாகாண விவசாய அமைச்சின் மீன்பிடி அலகு ஏற்பாடு செய்தநன்னீர் மீன்பிடி உற்பத்திகளின் உணவுக் கண்காட்சி 29.08.2026 இன்று கிளிநொச்சி பசுமைப்பூங்காவில் ஆரம்பமாகியது. இன்று பிற்பகல் மீன்பிடி அலகின்…

67 0 0
இலங்கை செய்திகள்

எச்சரிக்கை!! : எல் நினோ தாக்கத்தால் உணவுப் பற்றாக்குறை மற்றும் மந்தபோஷணை ஏற்படும் அபாயம்!

எல் நினோ தாக்கத்தால் இலங்கையில் கடுமையான உணவுப் பற்றாக்குறை, மந்தபோஷணை ஏற்படும் அபாயம்! – விசேட வைத்தியர் நிபுணர் சமல் சஞ்சீவ எச்சரிக்கை உலகளாவிய ரீதியில் அதிகரித்து…

81 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தொடர்ச்சியாக ஏமாற்றும் அநுர அரசு : சஜித் குற்றச்சாட்டு

தேர்தல் காலத்திலும் அதற்குப் பின்னரும் இந்த அரசானது ஒரு இலட்சத்து 50 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும், 14 ஆயிரத்து 8 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி…

31 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துங்கள்! : சஜித் வலியுறுத்தல்!!

அரசு மக்களுக்குச் சிறந்த சேவையைத்தான் ஆற்றி வருவதாகக் கூறினால், உடனடியாக மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு தான் சவால் விடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

52 0 0