நேருக்கு நேர் மோதிய உந்துருளிகள்; இளைஞன் உயிரிழப்பு.!
அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவ பிரதான வீதியின் தீப்திகம பகுதியில் இரு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், பலத்த காயங்களுக்குள்ளான மேலும் இருவர் சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எலயாபத்துவ பொலிஸ் பிரிவின் தீப்திகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (06) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக விசாரணை மேற்கொண்டுவரும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அநுராதபுரம், அளுத்கம பகுதியை வசிப்பிடமாக கொண்ட 27 வயதுடைய எஸ்.எம் வசீம் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனது சடலம் தற்சமயம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் எலயாபத்துவ பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.