உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
30 ஞாயிறு

தமிழர்களைத் தேசிய இனமாக ஏற்றால்தான் நாட்டில் உண்மையான சமாதானம் மலரும்.!

இலங்கை செய்திகள் 3 மாதங்கள் முன்
34 பார்வைகள்

இலங்கையில் தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதையும், அவர்களின் பூர்வீக நிலம் மற்றும் உரிமைகளையும் தென்னிலங்கை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொண்டு மதிக்கும்போதே இந்த நாட்டில் உண்மையான சமாதானம் ஏற்படும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி – யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.

தேசிய சமாதான பேரவையின் ஏற்பாட்டில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற மாநாட்டில், சர்வமதத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான தூதுவர் மற்றும் ஏனைய நாடுகளின் தூதுவர்கள் முன்னிலையில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இலங்கையிலே பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கி விகாரைகள் அமைக்கப்படும் அதேவேளை, ஏனைய மதங்களின் நிலங்கள் குத்தகை அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளையும் மீறி குருந்தூர் மலை, வெடுக்குநாறி மலை, நீராவியடி, தையிட்டி, குச்சவெளி ஆகிய இடங்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, குச்சவெளியில் இரண்டு வீதமே சிங்கள மக்கள் வாழும் சூழலில் 36 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சவேந்திர சில்வா மற்றும் மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் பறிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் மக்கள் அகதிகளாக வாழ்கின்றார்கள். அண்மையில் மலையகத்தில் நீலகாமம் தோட்ட மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு கொட்டில்கள் உடைக்கப்பட்டுள்ளன. தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் மலையக மக்கள் இன்றும் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே நடத்தப்படுகின்றார்கள்.

கடந்த மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் திரண்ட மக்களின் கண்ணீரே தமிழ் மக்களின் ஆறாத வடுக்களுக்கு சான்றாகும். 2009இல் பாதர் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த 56 போராளிகள் உட்பட பல்லாயிரக்கணக்கான காணாமல் ஆக்கப்பட்டோருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. முன்னாள் மாகாண சபை அமைச்சர் அனந்தி சசிதரன் தன் கணவனைக் கைகளால் ஒப்படைத்தும் இன்னும் நீதிமன்றில் நீதி கிடைக்கவில்லை.

யுத்த காலத்தில் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பேர் காணாமல் போயும் கொல்லப்பட்டும் இருக்கின்றார்கள் என்ற உண்மையான வரலாற்று ஆவணத்தை மன்னாரின் மறைந்த பேராயர் இராயப்பு ஜோசப் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தார்.

உள்நாட்டில் நீதி விசாரணை சரியாக நடக்காததால்தான் நாங்கள் ஜெனிவாவை நாட வேண்டியுள்ளது. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவோ உள்நாட்டில்தான் பேச வேண்டும் என்கின்றார். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்காக இதுவரை எந்தவொரு சிங்கள தலைவரும் மன்னிப்பு கேட்கும் தைரியத்தை காட்டவில்லை.”

கிளிநொச்சி – வட்டக்கச்சியில் பிறந்து வளர்ந்த நான் போரின் கொடூரங்களை நேரில் கண்டவன். 1976இல் தந்தை செல்வா சுட்டிக்காட்டியபடி பண்டாரநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க ஆகியோருடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தென்னிலங்கை ஆட்சியாளர்களால் கிழித்தெறியப்பட்டன. 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தால் 40 வருடங்களாக தமிழர்கள் அழிந்து கொண்டிருக்கின்றோம். இதனால்தான் வேறு வழியின்றி 1974 மே 14இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலம் பண்ணாகத்தில் தமிழீழ பிரகடனம் செய்ய நேரிட்டது.

அரசின் இத்தகைய ஆயுத வன்முறைதான் அன்று குட்டிமணி, தங்கத்துரை மற்றும் தலைவர் பிரபாகரன் போன்ற தமிழ் இளைஞர்களை துப்பாக்கி தூக்க வைத்தது. வெலிக்கடை சிறையில் கண்கள் தோண்டப்படுவதற்கு முன்னால், ‘எனது கண்கள் மலரும் தமிழீழத்தை பார்க்க வேண்டும்’ என்று குட்டிமணி கூறினார். ‘ஆயுதங்கள் எங்கள் மீது திணிக்கப்பட்டவை’ என்று தங்கத்துரை கூறினார்.

ஆனால், 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழ் மக்கள் தரப்பிலிருந்து ஒரு குண்டு சத்தமாவது கேட்டதா? தமிழ் மக்கள் மிகவும் அமைதியாகவே இருக்கின்றார்கள். ஆட்சியாளர்கள் மாறி ஒன்றரை வருடங்கள் கடந்தும் சமாதானத்திற்கான தூரம் இன்னும் எட்டாக்கனியாகவே தெரிகின்றது. நாங்களும் நீங்களும் இந்த நாட்டின் சம பங்காளிகளாக வாழ வேண்டுமானால் தமிழர்களை ஒரு தேசிய இனமாக தென்னிலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘மலையகத்தின் பெருந்தலைவர்’ அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தினம் இன்று!

‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 113ஆவது ஜனன தின நினைவேந்தல் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகிறது. 1913ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

68 0 0
இலங்கை செய்திகள்

BMICH இல் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! – காரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி மீட்பு

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றிருந்த யுவதி காதலனால் கடத்தல்! கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளச்…

65 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாண கல்வித்துறையில் உள்ள சவால்கள் தொடர்பில் ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல்

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சேவைச் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை…

63 0 0
இலங்கை செய்திகள்

இனவாத மோதலைத் தூண்டுவோருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை! – அமைச்சர் நளிந்த எச்சரிக்கை!!

இனங்களுக்கிடையே பிளவுகளையும் இனவாத மோதல்களையும் தூண்டும் நோக்கில், தேசியக் கொடி தொடர்பில் தவறான தகவல்களைப் பரப்பி வருபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார…

48 0 0