குப்பை வீசிய நபர் ; தட்டிக்கேட்ட இளைஞனை ‘சண்டியர்’ பாணியில் மிரட்டல்!
பொது இடங்களை அசுத்தப்படுத்தும் செயல்களைத் தட்டிக்கேட்கும் சமூகப் பொறுப்புள்ள இளைஞர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கல்முனையில் இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கல்முனை தோனா அடியில் (தோனா ஓரம்) நபர் ஒருவர் மிகவும் பகிரங்கமாக, எவ்வித அச்சமுமின்றி குப்பைகளைக் கொட்டியுள்ளார்.
இதனை அந்த இடத்திலிருந்த இளைஞர் ஒருவர் கவனித்து, உடனடியாகச் சென்று அவரை மறித்துள்ளார்.
”நீங்கள் பொது இடத்தில் இப்படிச் செய்வது சரியா? இது சட்டவிரோதமானது இல்லையா?” என்று அந்த இளைஞர் மிகவும் நியாயமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த அந்த நபர், தனது தவறை உணர்ந்து வருந்துவதற்குப் பதிலாக, மிகவும் திமிரான முறையில் நடந்துகொண்டுள்ளார்.
“நான் இப்படித்தான் செய்வேன், உங்களால் முடிந்ததைச் செய்து கொள்ளுங்கள்” என்று மிரட்டும் தொனியில் கூறிவிட்டு, ஒரு சண்டியரைப் போல அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
தற்போது கல்முனை மாநகர சபை மற்றும் சுகாதாரப் பிரிவினர் நகரைச் சுத்தமாக வைத்திருக்கப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இவ்வாறான பொறுப்பற்ற மனிதர்களின் செயல் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது இடங்களில் கழிவுகளை வீசுவதும், அதனைத் தட்டிக்கேட்பவர்களை மிரட்டுவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இத்தகைய நபர்களை அடையாளம் கண்டு உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.