ஐ.நா.வில் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் முக்கிய கலந்துரையாடல்.!
ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொன்த, ஐ.நாவின் அரசியல் மற்றும் அமைதி காக்கும் விவகாரங்களுக்கான உதவிப் பொதுச்செயலாளர் காலித் கியாரியுடன் முக்கியமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பில், ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஜயந்த ஜயசூரிய உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.இக் கலந்துரையாடலின் போது, ஐ.நா. அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடும் இலங்கைத் துருப்பினரைப் பயிற்றுவித்து தயார்படுத்தும் செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக, பணியில் அமர்த்தப்படும் இராணுவத்தினருக்கு மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் மனித உரிமைச் சட்டங்கள் தொடர்பான விரிவான பயிற்சிகள் வழங்கப்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.இந்தப் பயிற்சிகள், மனித உரிமைகள் தொடர்பான விசாரணை நடைமுறைகள் மற்றும் கொள்கைகள் குறித்த அறிவை மேம்படுத்துவதுடன், சர்வதேச போர் நடைமுறைகள் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சட்ட விதிகள் குறித்த புரிதலையும் வலுப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஐ.நா. தரநிலைகளுக்கு ஏற்ப தொழில்முறை ஒழுக்கத்தைப் பேணுவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நிறுவப்பட்ட விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் சந்தர்ப்பங்களில் அவற்றை விசாரிக்கும் பொறுப்புக்கூறல் முறைமைகள் மற்றும் தேசிய விசாரணை அதிகாரியின் பங்கு குறித்தும் இச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது.இச்சந்திப்பு, இலங்கைஇராணுவத்தின் தொழில்முறை தரத்தையும் சர்வதேச அமைதிப்படை பணிகளில் அவர்களின் பங்களிப்பையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.