சுகாதார சீர்கேட்டுடன் காணப்படும் கம்பளை பேருந்து நிலையம்.!
மத்திய மாகாணம் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கம்பளை நகரில் உள்ள அரச, தனியார் பேருந்து தரிப்பிடம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வரும் நிலையில் சம்பந்தப்பட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் கம்பளை நகரசபை அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள், சாரதிகள், நடத்துனர்கள், வர்த்தகர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அந்த பேருந்து தரிப்பிடத்தின் பல பகுதிகளிலும் பாரிய அளவில் உக்கும், உக்காத பொருட்கள் குவிந்து கிடக்கின்றன. பல வாரங்களுக்கு மேலாக இந்த நிலை காணப்படுவதால் நாளாந்தம் ஆயிரக்கணக்கான மக்கள் பாடசாலை மாணவர்கள், நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் அங்கு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் வந்து செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடன் அந்த பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.


