வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி.!
ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் இன்று (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போதே, இன்று காலை 9:30 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
குறித்த முச்சக்கர வண்டியை அக்குடும்பத்தின் மூத்த மகள் ஓட்டிச் சென்றுள்ளார். அவரிடம் முறையான சாரதி அனுமதிப்பத்திரம் இருந்ததாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
வட்டவளைப் பகுதியிலுள்ள வளைவு ஒன்றில் முச்சக்கர வண்டி பயணித்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முற்பட்ட வேளையில் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முச்சக்கரவண்டி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் காயமடைந்துள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.