உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

தையிட்டி காணிகளை விடுவிக்கும் நோக்கில் அரசாங்கம் செயற்படுவதாக தெரியவில்லை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
33 பார்வைகள்

தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்கு செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டி பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்று இடம்பெற்ற ‘தையிட்டி: அடுத்து என்ன?’ எனும் தலைப்பில் தையிட்டி காணி உரிமையாளர்களுக்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு,
“தையிட்டி விகாரையின் பெயர்ப்பலகையில் ஸ்ரீ லங்கா இராணுவத்தினரால் கட்டப்பட்டு அவர்களால் பராமரிக்கப்படுகின்ற விகாரையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விகாரை பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமானதா என்ற ஒரு கேள்வியும் எழுகின்றது.

விகாரை அமைந்திருக்கும் காணி உரிமையாளர்கள் அந்த விகாரையின் வாசலுக்குக் கூடச் செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. தென்பகுதியில் குழப்பங்கள் ஏற்படும் எனக் கூறிக்கொண்டு தையிட்டி விகாரைக்கு பலத்த பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்படுகின்றது. இதன் அர்த்தம் அந்த விகாரையில் இருக்கக்கூடிய ஒரு துண்டு நிலத்தை கூட விடுவிக்க முடியாது என்பதே ஆகும்.

தையிட்டி விகாரைப் பிரச்சினை சர்வதேச நாடுகளால் மிகவும் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது. அண்மையில் வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி தையிட்டி விகாரைப் பிரச்சினை தொடர்பாகவும் எங்களோடு கலந்துரையாடி இருந்தார். அந்த விகாரைப் பிரச்சினை தொடர்பாக தாங்கள் தொடர்ந்தும் அவதானித்து வருகிறார்கள் எனவும் எங்களிடம் தெரிவித்திருந்தார். தையிட்டி விவாகாரம் தொடர்பில் உலக நாடுகளால் இந்த அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் நாட்களில் அமைச்சர்கள் குழு வெளிநாட்டுக்குச் செல்லவுள்ளது. அதனாலேயே வெளிநாடு செல்வதற்கு முன்னர் தையிட்டிப் பிரச்சினையைத் தீர்ப்பது போன்று காட்டிக் கொள்வதற்காக அவசர அவசரமாக காணி உரிமையாளர்களோடு கலந்துரையாடப்பட்டுள்ளது.

வேறு இடங்களில் காணிகளை சுவீகரிக்கின்ற போது எழுத்து மூலமான அறிவிப்பின் மூலமே காணிகளை சுவீகரிக்கிறார்கள். ஆனால் தையிட்டி விகாரைப் பிரச்சினையில் நடப்பதோ வேறு விதமாக உள்ளது.

நில அளவைகள் திணைக்களம் எந்தக் கட்டளையின் அடிப்படையில் இந்தக் காணிகளை அளவீடு செய்வதற்கு தயாராகின்றது? எழுத்து மூலமாகக் கட்டளைகள் எதுவும் வழங்கப்பட்டிருக்கின்றதா? அவ்வாறாயின் என்ன தேவைக்காக குறித்த காணிகள் அளவிடப்படுகின்றன என அந்த எழுத்து மூல ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுகின்றது.

மக்களுக்கு காணிகளை விடுவிப்பதற்காகவே இந்த அரசாங்கம் காணிகளை அளவீடு செய்கின்றது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. குருந்தூர் மலையிலும் அகழ்வு பணிகளை மாத்திரமே செய்வோம், எதுவித கட்டுமானப் பணிகளும் இடம்பெறாது என அப்போதைய புத்தசாசன அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார். ஆனால் தற்போது ஒரு விகாரை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுவிட்டது.

இப்படி தையிட்டி பகுதியிலும் பிரச்சினை கைமீறிப் போன பின்னர் எதிர்ப்புக் காட்டி எதுவித பலனும் இல்லை. தையிட்டிப் பகுதியில் தொடர்ந்தும் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்று வருகின்றன. மூன்று வருடங்களாக இடம்பெறும் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகவே அந்த ஆக்கிரமிப்புகள் கட்டுப்படுத்தப்பட்டன. இல்லையெனில் அந்த இடம் முழுவதுமே ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.

தையிட்டிக் காணி உரிமையாளர்கள் மாற்றுக் காணிகளை பெற்றுக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றனர் என வடக்கு மாகாண ஆளுநர் அபத்தமான பொய் ஒன்றை அண்மையில் கூறியிருந்தார். தொடர்ந்தும் தையிட்டி விகாரை பகுதியைச் சூழ உள்ள காணிகளுக்குப் பொலிஸ் மற்றும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இவற்றையெல்லாம் அவதானிக்கின்ற போது காணிகளை விடுவிக்கும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்படுகின்றது என்ற உத்தரவாதம் இல்லை என்றே கூறவேண்டும்.

அரசாங்கம் காணிகளை அளவீடு செய்து மக்களுக்கு வழங்கும் என்பதனை எழுத்து மூலமாக அறிவிக்குமாக இருந்தால் காணிகளை அளவீடு செய்வதற்கான அனுமதி வழங்குவது தொடர்பில் சிந்திக்கலாம். ஆனால் அப்படி ஓர் எழுத்துமூல உத்தரவாதத்தை தராத நிலையில் அளவீட்டு பணிகளை அனுமதிக்க முடியாது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

உலக வர்த்தக மையமாக வடக்கை மாற்றுங்கள்! – மனோ கணேசன் எம்.பி வலியுறுத்தல்

உலக வர்த்தக மையமாகவடக்கை மாற்றுங்கள்! வட இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலோபாய வாய்ப்புகள் பலாலி சர்வதேச வானூர்தி நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் ஆகும் என்று தமிழ்…

51 0 0
இலங்கை செய்திகள்

பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களை வாகனத்தால் மோதி அச்சுறுத்த முயன்ற புலம்பெயர் தமிழர்.!

யாழ். வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயப் பகுதியில் கடமையிலிருந்த பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் மீது வாகனத்தால் மோதி இடையூறு விளைவிக்க முயன்றார் என்று புலம்பெயர் தமிழர் ஒருவர்…

47 0 0
இலங்கை செய்திகள்

கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயம்.!

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் ஆரையம்பதிப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை இடம்பெற்ற பாரிய வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய்…

39 0 0
இலங்கை செய்திகள்

அநுர ஓர் அதிசயம்; தமிழ் தலைவர்கள் தரகர்கள்.!

தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு மிகச் சிறப்பாக சேவை செய்து வருவதாக எமது தலைமுறை கட்சியின் தலைவர் சிதம்பரம் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29) கொழும்பில் ஊடகங்களுக்குக்…

32 0 0