மத்தியகிழக்கின் போர் சூழலால் ரஸ்யாவின் கச்சா எண்ணெயில் லாபம் அதிகரிப்பு!
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. வெளிநாட்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈராக் தனது எண்ணெய் துறைமுகங்களின் செயல்பாடுகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் உலகச் சந்தையில் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருவது ரஷ்யாவிற்கு பெரும் நிதி நன்மையை ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் கிறிஸ் வீஃபர் தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் ரஷ்யாவின் எண்ணெய் ஏற்றுமதி வருவாய் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் தடைகளால் முன்னர் குறைந்த விலைக்கு விற்கப்பட்ட ரஷ்ய எண்ணெய், தற்போது உலகச் சந்தையில் நிலவும் அதிக விலைக்கு ஆசிய நாடுகளால் போட்டியிட்டு வாங்கப்படுகின்றது.ரஷ்யா மட்டுமல்லாது அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா போன்ற நாடுகளின் எண்ணெய் உற்பத்தியாளர்களும் இந்த விலை உயர்வால் இலாபம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையில் ஹார்முஸ் நீரிணையில் பயணிக்கும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். அதேவேளை, ஒரு பீப்பாய் எண்ணெய் விலை 200 அமெரிக்க டொலரை எட்டக்கூடும் என ஈரான் உலக நாடுகளை எச்சரித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் மனிதமற்ற வான்வழி சாதனங்களை பஹ்ரைன், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் இடைமறித்து அழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
அதன்படி, ஈரானின் நியாயமான உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும், மேலும் எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் நடைபெறாது என்பதற்கான சர்வதேச உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இஸ்ரேல் மீது ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஒருங்கிணைந்த தாக்குதல்களை முன்னெடுத்துள்ளனர். அதற்கு பதிலடியாக, லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேலிய இராணுவம் தொடர்ந்து வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.