கிளிநொச்சியில் கொலை சம்பந்தமான வழக்கில் நபர் ஒருவருக்கு மேல் நீதிமன்றம் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை..!
கிளிநொச்சி மேல் நீதிமன்றம், கொலை அச்சுறுத்தல் விடுத்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டமை குற்றங்களில் தொடர்புடைய நபருக்கு ஐந்து ஆண்டுகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கு சம்பந்தமாக, 2022 மே மாதம் 8ஆம் திகதி, முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் குற்றவாளி ஒருவர் ஓட்டோ சாரதியை கத்திமுனையில் அச்சுறுத்தி அவரது ஓட்டோவை கடத்தியிருந்தார். இதனையடுத்து, பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்து, ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை ஓட்டோவால் மோதி படுகாயம் ஏற்படுத்தியிருந்தார்.
குற்றவாளி கைது செய்யப்பட்டு வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டது.நேற்று, நீதிமன்ற நீதிபதி ஏ. ஜி. அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டு, குறித்த நபருக்கு ஐந்து ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 3,50,000 ரூபா மற்றும் மற்றையவருக்கு 5,00,000 ரூபா இழப்பீடு செலுத்தப்பட வேண்டிய கட்டளை விதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படாவிட்டால், முறையே ஒரு வருடம் மற்றும் இரண்டு வருடங்கள் கூடுதல் சிறைத் தண்டனையாக அமையும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.