பங்களாதேச பொதுத்தேர்தல் வாக்களிப்பு நிறைவு, வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்.!
உலக நாடுகள் கவனித்திருந்த பங்களாதேசத்தின் 13ஆவது தேசிய பொதுத் தேர்தல் வாக்களிப்பு நேற்று மாலை 4.30 மணியுடன் நிறைவடைந்தது. மொத்தமாக 48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக பங்களாதேச தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
வாக்குகளை எண்ணும் பணிகள் வாக்களிப்பு முடிந்தவுடன் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இளைஞர் போராட்டங்களைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த 2024 ஆகஸ்ட் 5ஆம் திகதி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற இடைக்கால அரசு 18 மாதங்களுக்கு பிறகு தேர்தலை அறிவித்ததையடுத்து இந்த பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது.தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுமார் 9 இலட்சத்து 58 ஆயிரம் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நேற்று காலை 7.30 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்தது
.
இத்தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேச தேசியவாதக் கட்சி கூட்டணிக்கும், ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற்றால், அதன் முடிவுகளை தமது கட்சி ஏற்றுக் கொள்ளும் என தாரிக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.அதேவேளை, ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் சபிகுர் ரஹ்மான், உத்தியோகபூர்வ முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படும் வரை ஆதரவாளர்கள் வாக்குச்சாவடிகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இது மிக முக்கியமான கட்டமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.