அமெரிக்க – ஈரான் பேச்சுவார்த்தையை சீர்குலைக்க இஸ்ரேல் முயற்சி.!
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் அமெரிக்காவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதற்கு இஸ்ரேல் முயற்சிப்பதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லரிஜானி தெரிவித்துள்ளார்.பேச்சுவார்த்தைகளைச் சீர்குலைத்து பிராந்தியத்தில் போரைத்தூண்ட முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சூழலில், அலி லரிஜானி இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.கட்டாரின் தலைநகர் தோஹாவுக்கு விஜயம் செய்திருந்த லரிஜானி, அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அப்பேட்டியில் அவர் மேலும் குறிப்பிடுகையில், புதுப்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் ஒரு நுட்பமான கட்டத்தில் இருப்பதால், அப்பேச்சுவார்த்தைகளைத் தடம் புரள செய்வதற்காக இஸ்ரேல் சாக்குப்போக்குகளை உருவாக்கி வருகிறது. நாங்கள் அமெரிக்காவுடன் மட்டுமே பேச்சுவார்த்தைகளை நடத்துகிறோம். இஸ்ரேலுடன் எந்தப் பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை,இஸ்ரேலின் உத்தி பிராந்தியத்தை சீர்குலைப்பதாகும்.
இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரலானது அவர்களால் ஈரான் பற்றி கூறப்படும் கவலைகளுக்கு அப்பாற்பட்டது. கடந்த செப்டம்பரில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து கட்டார் தலைநகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து தெளிவாகிறது.தெஹ்ரானும் வொஷிங்டனும் கடந்தாண்டு ஜுன் மாதத்திற்கு முன்னர் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை திறம்பட முன்னெடுத்து வந்த சூழலில், ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் அமெரிக்காவையும் எம்மீது தாக்குதல் நடத்த வழிவகை செய்தது என்றும் குறிப்பிட்டுள்ளார். அல் ஜசீரா