யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டம்.!
இலங்கை ஜனநாயகக் சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக முன்றலில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வு அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி – தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரச அதிபரின் உரை உள்ளடங்கலாக நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ். இந்து ஆரம்பப் பாடசாலை ஆகிய பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றன.
மேலும், இன்றைய அணிவகுப்பில் பங்குபற்றிய மாணவர்களைக் கெளரவித்து மர நடுகை மற்றும் சிரமதானம் போன்ற நிகழ்வும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் பலாலி பாதுகாப்பு படைகளின் தலைமைப்பீடத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக், பொலிஸ், கடற்படை உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரச அதிபர், மேலதிக அரச அதிபர் (காணி) உள்ளிட்ட மாவட்ட செயலகப் பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





