போதைப்பொருளுடன் இருவர் கைது.!
கிரிபத்கொடையில் சுமார் 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரும், போதைப்பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேகநபரும் நேற்று செவ்வாய்க்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பு களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்டது.
கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வைத்தியசாலை வீதிப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த உந்துருளி ஒன்று இடை மறிக்கப்பட்டது.
அதனைச் சோதனையிட்ட போது, அங்கிருந்து 3 கிலோகிராம் 18 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதுடன், கிரிபத்கொடை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
அவரிடமிருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட உந்துருளி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணைகளின் போது, இந்தப் போதைப்பொருள் தொகையை வழங்கிய பிரதான நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, கட்டுநாயக்க பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த 32 வயதுடைய தாய்லாந்து பிரஜை ஒருவர் இரண்டாவது சந்தேகநபராகக் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக கிரிபத்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், சர்வதேச ரீதியில் இந்தப் போதைப்பொருள் கடத்தலுக்குத் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்து கிரிபத்கொடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.