அறநெறி மாணவர்கள் கலை நிகழ்வுகளுடன் சங்கமன்கண்டியில் திருவிழா.!
இலங்கை சைவநெறிக்கழகம், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை மற்றும் சங்கமன்கண்டிப் பிள்ளையார் உள் ஆலய நிருவாக சபை ஆகியவற்றின் இணைப்புடன், பல்வேறு சமூக அமைப்புகளின் ஒத்துழைப்போடும், இந்து சமய கலாசார திணைக்களத்தின் ஆதரவோடும் நடாத்தப்பட்ட சைவப்பெருஞ்சமய தைப்பூச விழா, வேலாயுதப்பெருமானின் வேலினை மலைமீது திருநிலைப்படுத்தும் நிகழ்வு மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நேற்று (01) காலை முதல் மாலை வரை சிறப்பாக இடம்பெற்றன.
ஆலயத் தலைவர் முருகானந்தமூர்த்தி தலைமையில், செயலாளர் வி. குணாளனின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில், ஆறுமுகநாவலர் சபையின் தலைவரும் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பிரதித் தலைவருமான சின்னத்துரை தனபாலன், இலங்கை சைவநெறிக்கழகத்தின் தலைவரும் வைத்திய கலாநிதியுமான இ. பிரதாபன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ. தர்மதாசா, மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கு. ஜெயராஜி, திருக்கோவில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் நிசாந்தினை தேவராஜ் உள்ளிட்ட பல ஆலயங்களின் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது, பெருந்திரளான அறநெறி மாணவர்களின் சமய தீட்சை, மலைமீது அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் இடம்பெற்றது. குறித்த கிரியைகளை யாழ்ப்பாணம் நல்லூர் பிள்ளையார் ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண ஜனேந்திரக் குருக்கள் நடாத்தி வைத்தார். தொடர்ந்து, மலைமீது அமைக்கப்பட்ட வேலாயுதப்பெருமானின் வேல் கற்சிலையும், அருணகிரிநாதர் மற்றும் பாம்பன் சுவாமிகளின் சிலைகளும் திருநிலைப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், ஆலயத்தில் அமைக்கப்பட்ட விசேட மேடையில் அறநெறி மாணவர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.அதேநேரம், இலங்கை சைவநெறிக்கழகம் மற்றும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை இணைந்து, சைவத்திற்குப் பெருந்தொண்டாற்றிய முன்னாள் ஆலய செயலாளர் வே. சந்திரசேகரம் அவர்களுக்கு விசேட நினைவுச்சின்னம் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், மேலும் பலரும் கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை, ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமன்றத்தினரால் தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வின் நிறைவில், கலந்து கொண்ட அமைப்புகளுக்கு அறநெறி தொடர்பான புத்தகங்களும் வழங்கப்பட்டன.

