முறையான பேருந்து போக்குவரத்து இன்றி சாமிமலை பகுதியில் உள்ள மக்கள் அவதி.!
கடந்த சில ஆண்டுகளாக சாமிமலை நகரிலிருந்து அதிகாலை வேளையில் தலைநகர் கொழும்புக்குச் செல்ல அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் இல்லாத காரணத்தினால், அந்தப் பகுதியில் வசிக்கும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வர்த்தகர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சாமிமலை நகரைச் சேர்ந்த சுமார் 10 பெருந்தோட்டத் தொழிலாளர்கள், மூன்று கிராம மக்கள் மற்றும் அப்பகுதி வர்த்தகர்கள் இந்தப் போக்குவரத்து சிக்கலால் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
அதிகாலை வேளையில் கொழும்புக்குச் செல்ல வேண்டியவர்கள், சாமிமலை நகரிலிருந்து சுமார் 8 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மஸ்கெலியா நகருக்கு வந்து, அங்கிருந்து அதிகாலை 4.00 மணிக்கு அவிசாவளை அரச பேருந்து நிலையத்திற்கு உரித்தான பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாளாந்தம் தலைநகர் கொழும்புக்குச் செல்லும் மக்கள், சாமிமலை நகரிலிருந்து முதலில் ஹட்டன் நகருக்குச் சென்று அங்கிருந்து கொழும்புக்குப் பயணம் செய்ய வேண்டியதோ அல்லது மஸ்கெலியா நகருக்குச் சென்று அங்கிருந்து செல்ல வேண்டியதோ என மாற்றுப் பாதைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மஸ்கெலியா நகரிலிருந்து ஆரம்பிக்கப்படும் கொழும்பு, கண்டி மற்றும் நாவலப்பிட்டி நோக்கிச் செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்து சேவைகள் அனைத்தும் சாமிமலை நகரிலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போக்குவரத்து அமைச்சரின் கவனத்திற்கு இந்தப் பிரச்சினையை முன்வைக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.