மன்னார் நச்சிக்குடா கடற்கரை பகுதியில் ஆமை இறைச்சி, முட்டைகளுடன் மூவர் கைது.!
மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, ஆமை இறைச்சி மற்றும் ஆமை முட்டைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நச்சிக்குடா கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான ஒரு படகை சோதனைக்குட்படுத்தினர்.அந்தச் சோதனையின் போது, சட்டவிரோத விற்பனைக்குத் தயாராக வைத்திருந்த சுமார் 17 கிலோ கிராம் ஆமை இறைச்சி, 39 ஆமை முட்டைகள் மற்றும் ஒரு படகு ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதனுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மன்னார் மாவட்டம், நச்சிக்குடா பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள் 26 முதல் 32 வயதுக்கிடைப்பட்டவர்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், ஆமை இறைச்சி, ஆமை முட்டைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

