தமிழரசுக் கட்சியானது பதவி ஆசைக்கும் கதிரைப் போட்டிக்குமான கட்சியாக மாறியுள்ளது.!
தமிழ் மக்களின் உரிமையை நோக்கிச் சென்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியானது இன்று பதவி ஆசைக்கும் கதிரைப் போட்டிக்குமான கட்சியாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சி இன்று பலவிதமாக சிதைந்துபோய் தமிழர்களின் உரிமையினை வென்றெடுப்பதை மறந்து தங்களுக்கான முயற்சியை வென்றெடுப்பதற்கான முயற்சியினையே முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று களுவாஞ்சிகுடியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற குழுத் தலைவர் சிறீதரனுக்கு எதிராக தங்களது கட்சிக்குள்ளேயே குழப்ப நிலையினை ஏற்படுத்திக்கொண்டு அவரை அரசியலமைப்பிலிருந்து விலக வேண்டும் என்ற விடயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதனைப்போன்று நாடாளுமன்ற குழுக்கள் தலைவர் பதவியிலிருந்தும் அவரை விலக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறியக் கிடைக்கின்றது.
இவர்களின் உட்கட்சி பூசல் என்பது தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை கேள்விக்குறியாக்கியுள்ளது. இவர்களுக்கு பின்னர் தமிழ் மக்கள் அணிதிரள்வார்களா என்ற சந்தேகம் இன்று எழுந்துள்ளது.
ஏனைய கட்சிகள் தங்களுக்குள் இருக்கின்ற முரண்பாடுகளை மறந்து ஒன்றுபடும்போது தமிழரசுக் கட்சியானது அடிப்பட்டுக் கொண்டிருக்கின்ற றிலைமையினை காணக்கூடியதாகவுள்ளது.
இன்று வடகிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு தளம் அதிகரித்து வருகின்றது. இன்று வடமாகாண மக்கள் தேசிய மக்கள் சக்தியையும் ஜனாதிபதினையும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே ஒரு மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துள்ளனர். இன மத வேறுபாடுகள் கடந்து இன்று தேசிய மக்கள் சக்தியுடன் பயணித்து வருகின்றனர்.
புதிய அரசியலமைப்பு தொடர்பாக தேர்தல் காலங்களில் வாக்குறுதியொன்றினை வழங்கியிருந்தோம். இது தொடர்பான முன்னெடுப்புகளையும் அரசாங்கம் முன்னெடுத்தது. ஆனால் டித்வா புயல் இந்த நாட்டில் ஏற்படுத்திய அழிவுகள் காரணமாக நாடு பின்தங்கிய நிலையினை அடைந்தது. அதிலிருந்து நாளை மீளகட்டியெழுப்பும் நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. விரைவில் புதிய அரசியலமைப்பு மற்றும் மாகாண சபை தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.