இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு.!
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் இறந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இன்று காலை 10.30 மணிக்கு நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட லக்சபான பிரிவில் இடம்பெற்றுள்ளது.
லக்சபான தோட்ட லக்சபான பிரிவில் உள்ள தொழிலாளர்கள் இன்று காலை பணிக்கு சென்ற வேளையில் மரணித்த நிலையில் கருப்பு நிற சிறுத்தை ஒன்று கிடைப்பதை கண்ட தொழிலாளர்கள் தோட்ட முகாமையாளருக்கு அறிவித்தனர்.
முகாமையாளர் இது குறித்து நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
உடன் நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மரணித்த நிலையில் இருந்த கறுப்பு நிற சிறுத்தையை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த சிறுத்தை மரணித்து மூன்று நாட்கள் ஆகி விட்டது எனவும் என்ன காரணமாக மரணித்தது என்று தெரியவில்லை என்று நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.