உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

வடக்கு மாகாண அபிவிருத்தியில் அநுர அரசு அதிக அக்கறை.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
17 பார்வைகள்

“போர் முடிவுற்ற கடந்த 16 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்த அரசுகளை விட, தற்போதைய அரசு வடக்கு மாகாணம் தொடர்பில் கூடுதல் கரிசனையுடனும், அக்கறையுடனும் செயற்படுகின்றது. வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரம் தொடர்பில் இவ்வாறானதொரு அக்கறை இதுவரை காண்பிக்கப்படவில்லை.”

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டினுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான குழுவினருக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு மாகாணப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளே காணப்படுகின்றன. ஆனால், இங்கிருந்து இவை மூலப்பொருட்களாகவே வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றை வடக்கிலேயே பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றுவதற்கான தொழிற்சாலைகள் எம்மிடம் இல்லை. இத்துறையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும்.

இந்தியாவுடனான விமானச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளமையால் வடக்குக்கு வரும் சுற்றுலாவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் வசதிகள் மேலும் மேம்படுத்தப்பட்ட பின்னர், நிச்சயமாக அதிகளவான சுற்றுலாவிகள் வருகை தருவார்கள். இதன் ஊடாக வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறை பாரிய வளர்ச்சியடையும்.

முதலீட்டாளர்கள் வடக்கில் முதலிடுவதற்குச் சாதகமான சூழல் தற்போது உருவாகியுள்ளது. அரசால் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதேபோல், பரந்தன் இரசாயனத் தொழிற்சாலையை மீள இயக்குவதற்கான அடிக்கல் நடப்பட்டுள்ளது. அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு’ முதலீட்டாளர்கள் மத்தியில் மிகச் சாதகமான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளது.” – என்றார்.

வடக்கு மாகாண சபை இயங்கிய காலத்தில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், கனடாவின் ரொரன்டோ மாநகரத்துக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட நட்புணர்வு ஒப்பந்தம் தொடர்பில் ஆளுநர் சுட்டிக்காட்டினார். அந்த ஒப்பந்தத்தின் கீழான செயற்பாடுகளை மீளவும் வலுப்படுத்துவது தொடர்பில் கரிசனை செலுத்துமாறும் அவர் உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

இச்சந்திப்பின் போது, கடந்த காலத்தில் மீள்குடியேறிய மக்களுக்கான உதவிகளை வழங்கியமைக்கு கனேடிய அரசுக்கு ஆளுநர் நன்றிகளைத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர், டித்வா பேரிடர் பாதிப்பு மற்றும் அதிலிருந்தான மீள்கட்டுமானப் பணிகள் குறித்தும், வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத் துறையின் வளர்ச்சி குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

வடக்கு மாகாணத்தின் அடிப்படைப் புள்ளிவிவரங்கள், முதலீட்டு வாய்ப்புகள், மாகாண அமைச்சுகளின் செயற்பாடுகள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் மாகாண அதிகாரிகளால் உயர்ஸ்தானிகருக்கு விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது.

இச்சந்திப்பில் ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் இணைப்புச் செயலாளர்கள், மாகாண சபை அதிகாரிகள் மற்றும் கனேடியத் தூதரக அரசியல் விவகாரச் செயலர் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்று மண்ணுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீரர்.!

2026ஆம் ஆண்டுக்கான Inter University Wrestling Championship மல்யுத்தப் போட்டியில் 70 கிலோ எடைப்பிரிவில் அக்கரைப்பற்றைச் சேர்ந்த I.F. Angelo முதலாம் Runner-Up இடத்தைப் பெற்று வெள்ளிப்…

0 0 0
இலங்கை செய்திகள்

நீர்கொழும்பை மையமாகக் கொண்டு நடைபெற்ற மூன்று சிறப்பு நிகழ்ச்சிகள்.!

42 ஆவது தேசிய மீலாதுன் நபி அரச பெருவிழாவிற்கு இணையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சித் தொடரின் மூன்றாவது நாளான இன்று (ஆகஸ்ட் 24), நீர்கொழும்பு பிரதேசத்தை மையமாகக்…

38 0 0
இலங்கை செய்திகள்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கட்டணங்கள் மற்றும் புதிய விதிமுறைகள் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பு.!

கொழும்பிலுள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைமையகத்தில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்திக்கான கட்டணங்கள் மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றையதினம் (24)…

56 0 0
இலங்கை செய்திகள்

யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.!

யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை, பிரதேச சபையின் தலைமை அலுவலக வளாகத்தில்…

40 0 0