சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபைகள் முறைமை தொடர்வது அவசியம்.!
தெற்குக்கு மாகாண சபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாண சபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு மாகாண சபைகள் முறைமை பொருத்தமானதன்று என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன், மேலும் கூறியிருப்பதாவது:
சட்டத்தரணியும், பெருவர்த்தகருமான திலித் ஜயவீரவை நான் பெரிதும் மதிக்கின்றேன். அவர் அண்மைய காலத்திலேயே அரசியலுக்குள் பிரவேசித்தார். அதுமாத்திரமன்றி அவர் ஒரு தேசியவாதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் எமது மக்கள் குறித்து அதிகம் சிந்திப்பதைப் போன்று, அவர் அவரது மக்கள் குறித்து அதிகம் சிந்திக்கிறார். இருப்பினும் அவரது சிங்களத் தேசியவாதமும் எமது தமிழ்த் தேசியவாதத்தைப் போன்றதே என்பதை ஏற்க அவர் மறந்துவிட்டார். தனது சிங்கள மக்களுக்காக சிந்திக்கும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் இந்த ஒட்டுமொத்த நாடும் சிங்கள மக்களால் சூழ்ந்ததல்ல.
இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரேயே வட, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழியையே பேசினர். இந்நாட்டில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வருவதாக பேராசிரியர் இந்திரபாலா கூறுகிறார்.
இலங்கைக்கு மாகாண சபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக் காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருத வேண்டியிருக்கிறது. உண்மையில் மாகாண சபைகள் ஒட்டுமொத்த இலங்கைக்குமான கட்டமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட முறைமை அல்ல. மாறாக வட, கிழக்கு மாகாணங்களுக்கான சுயாட்சியை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் ஊடாக வடிவமைக்கப்பட்ட முறைமையே அதுவாகும். எனவே வெறுமனே மாகாண சபைகள் முறைமை இலங்கைக்குக் பொருத்தமானதல்ல எனக் கூறுவதற்கு முன்னர், நாட்டின் கடந்தகால மற்றும் அண்மைய வரலாற்றை திலித் ஜயவீர நன்கு அறிந்துகொள்ளவேண்டும். தெற்குக்கு மாகாண சபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாண சபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.