உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

மாகாண சபைத் தேர்தலை நடத்தி வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
22 பார்வைகள்

“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பதவிக்கு வருவதற்கு முன்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பல்வேறுபட்ட உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருந்தன. அதில் முக்கியமாகப் புதிய அரசு பதவியேற்றவுடன் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், புதிய அரசு பதவியேற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல், எல்லை நிர்ணயக் குழுவை நியமிப்பதா? நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிப்பதா? போன்ற இழுபறிகளில் காலம் கடத்தப்படுகின்றதே தவிர, தேர்தல் வைப்பதற்கான எந்த உத்தேசமும் இருப்பதாகத் தெரியவில்லை.”

இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு:-

“தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், குறைந்தபட்சம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதனூடாக மாத்திரமே அரசியல் சாசனத்தில் இருக்கக்கூடிய அதிகாரங்களைக் கையிலெடுத்து, இயலக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு – கிழக்கில் உருவாக்க முடியும்.

அரசு பதவிக்கு வந்து புதிய அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசினாலும்கூட, அந்த அரசியல் சாசனம் வருமா? வராதா? அவ்வாறான அரசியல் சாசனத்தில் தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தரமான நிலைத்திருப்பதான தீர்வு எட்டப்படுமா? என்ற கேள்விகளும் எழுகின்றன.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில், தமிழ் மக்களுக்கு இன்று இருக்கக்கூடிய சட்டபூர்வமான பொறிமுறை என்பது மாகாண சபை மாத்திரமே. ஆகவே, அந்த மாகாண சபை அதிகாரங்களைக் கையிலெடுக்க வேண்டும் என்ற அடிப்படையில், அதற்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி வலியுறுத்தியது மாத்திரமல்லாமல், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கககூடிய ரெலோ, புளொட், சமத்துவக் கட்சி, ஜனநாயகப் போராளிகளுடன் இணைந்து தேர்தலை வைக்க வேண்டும் என்ற அடிப்படையில் வடக்கு, கிழக்கின் பல மாவட்டங்களில் பிரச்சாரங்களையும் முன்னெடுத்து வருகின்றது.

இன்று தமிழரசுக் கட்சியும் இணைந்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற பொது விடயத்தில் ஒருமித்துச் செயற்பட ஆரம்பித்திருக்கின்றோம்.

அண்மையில் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கரைத் தமிழ் கட்சிகள் சந்தித்தபோது, மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை இலங்கை அரசுக்கு இந்தியா கொடுக்க வேண்டும் என்று கோரியபோது கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதனை ஏற்றுக்கொண்டார்.

ஆகவே, மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சகல கட்சிகளும் ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதன் மூலம் இந்த விடயத்தில் நாங்கள் ஒன்றாகவே இருக்கின்றோம் என்பதை இந்தியாவுக்கும் தெளிவுபடுத்தியிருக்கின்றோம்.

தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு என்பது ஒற்றையாட்சிக்கு வெளியேதான் இருக்க முடியும் என்பதில் தமிழ்க் கட்சிகளுக்குள் ஒருமித்த கருத்து நிலவுகின்றது. அது சமஷ்டியாகவோ, தேசங்களின் கூட்டாட்சியாகவோ அல்லது வேறுவிதமாகவோ அமையலாம். ஆகவே புதியதோர் அரசியல் சாசனமானது தமிழ் மக்களுக்கான எத்தகைய தீர்வை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதில் தமிழ்த் தரப்பு அனைத்தும் ஒருமித்த கருத்துக்கு வந்து அந்த விடயம் அரசுக்கு முன்மொழியப்பட வேண்டும்.

சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்தபோது, பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற அடிப்படையில் ஒரு தீர்வு முன்மொழியப்பட்டு அது நாடாளுமன்றம் வரை வந்தது. இதனைப் போலவே இன்னும் பல முன்மொழிவுகள் இருக்கின்றன.

ஆகவே, தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடி சரியான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதே பொருத்தமானதாக இருக்கும். இதனை விடுத்து நான் மாத்திரமே சமஷ்டியைப் பற்றிப் பேசினேன் என்றும் மற்றவர்கள் வாய்மூடி இருந்தார்கள் என்றும் கூறுவது குறுகிய அரசியல் இலாபம் கொண்டதாக இருக்குமே தவிர, அர்த்தபுஷ்டியான ஒரு தீர்வை நோக்கிச் செல்கின்ற வழிமுறையாக இருக்காது.

தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய கட்சிகள் தனித்தனியே நின்று எதனையும் சாதிக்க முடியாது. புலம்பெயர் தேசத்திலிருப்பவர்களும்கூட சமகால அரசியல் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டு, பிராந்திய, உலக அரசியல் நிலைமைகளைப் புரிந்துகொண்டு, தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்கக்கூடிய முடிவுகளை நோக்கிச் செல்ல வேண்டுமே தவிர, அவர்களுடைய அணுகுமுறைகள் கொள்கைகள் என்பவை புலத்தில் இருப்பவர்களின் முயற்சிகளை முறியடிப்பதாக இருக்கக்கூடாது.

ஈழ விடுதலைக்கான மிகப் பலமான ஆயுதப் போராட்டம் ஒன்றை முப்பது ஆண்டுகள் நடத்தி பல்வேறுபட்ட தியாகங்களையும் அழிவுகளையும் சந்தித்த தமிழினம் ஒட்டுமொத்தமாக அழிந்துபோகும் நிலைக்கு நாங்கள் இடம்கொடுக்கக்கூடாது. ஆகவே, கால சூழ்நிலைக்கேற்ப, மூலோபாயங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மிக வலிமையாக இருக்கின்றோம் என்ற கற்பனையிலும் பேரம்பேசும் ஆற்றலில் இருக்கின்றோம் என்ற கற்பனையிலும் மிதந்து யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு எல்லாம் உடனடியாகக் கிடைத்துவிடும் என்று செயற்படுவது புத்திசாலித்தனம் அல்ல.

போராட்ட காலத்திலும் அதன் பின்னரான இன்றைய காலம் வரையிலும் இந்தியாவை ஆக்ரோஷமாக எதிர்த்து வந்த பலரும் இன்றுதான் இந்தியாவின் நட்பின் அவசியத்தைப் புரிந்துகொண்டிருக்கின்றார்கள். எமக்கு அண்மையில் இருக்கக்கூடியதும் எட்டு கோடி தமிழ் மக்களையும் நூற்றுநாற்பது கோடி மக்களையும் கொண்ட உலக வல்லரசுகளில் மதிக்கக்கூடிய ஒன்றான இந்தியாவின் நட்பு அவசியம் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மிக நீண்டகாலமாவே வலியுறுத்தி வந்திருக்கின்றது. இன்று அதனை பல்வேறு தமிழ்த்தரப்புகள் புரிந்துகொண்டிருப்பது வரவேற்கத்தக்கது மாத்திரமல்லாமல், தீர்வினை நோக்கிப் பயணிப்பற்கான நல்ல ஆரம்பமாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம்.

இனியாவது அனைவரும் கற்பனையிலிருந்து விடுபட்டு யதார்த்தத்துடன் சிந்தித்து எமது மக்களுக்கான விடியலை நோக்கி ஐக்கியத்துடன் முன்னேறுவோம். தொடர்ச்சியாக கட்சிகளுக்கு மேல் குற்றப்பத்திரிகை வாசிப்பதை விடுத்து, தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காக ஐக்கியப்பட்டுச் செயற்படுவோரை பலப்படுத்துவதற்கும் மக்கள் முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.” – என்றுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

83 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0