சித்த மருத்துவ உற்பத்தி, மூலிகைப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த விசேட வேலைத்திட்டம்.!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சித்த மருத்துவத்திற்கு தேவையான மருந்து உற்பத்தியை மேம்படுத்தவும் சித்த மருத்துவத்தை வலுப்படுத்தவும் மூலிகை மருத்துவ பயிர்ச்செய்கையை ஊக்குவித்தல் எனும் சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றினை நேற்று (25.11.2026) நாடாளுமன்றத்தில் முன்மொழிந்து உரையாற்றும்போதே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக போதுமான காணிகள் உள்ள வன்னி மாவட்டங்கள் மற்றும் கிளிநொச்சியில், கல்மடுநகர் உள்ளடங்கலாக மூலிகைத் தாவர பயிர்ச்செய்கைக்கும் சித்த மருத்துவ உற்பத்திக்குமாகப் பொருத்தமான அரச காணிகளைப் பயன்படுத்துவது மற்றும் சித்த மருத்துவ சுகாதார சேவைகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்றம் இப்பொழுது ஒத்திவைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணையை நான் முன்வைக்கக் கருதுகிறேன் என்பதை இதன்மூலம் அறிவிக்கின்றேன்.
இலங்கையின் பாரம்பரிய சுகாதார அமைப்பின் முக்கிய அங்கமாகச் சித்த மருத்துவம் திகழ்கிறது. குறிப்பாக இது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. உள்ளூர் சமூகங்களுக்கு இலகுவாகக் கிடைக்கக்கூடிய சுகாதாரச் சேவையை உறுதிப்படுத்துவதற்கு சித்த வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் மருந்து விநியோக வசதிகளை வலுப்படுத்துவது இன்றியமையாததாகும்.
வன்னி மாவட்டங்களும் கிளிநொச்சியும் மூலிகைப் பயிர்ச்செய்கைக்கு கணிசமான வளத்தையும் ஆற்றலையும் கொண்டுள்ளன. குறிப்பாக கல்மடு நகரில் பொருத்தமான காணிகளை அபிவிருத்தி செய்வது உள்ளூர் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் என்பதுடன் இறக்குமதி செய்யப்படும் மருத்துவ மூலப்பொருட்களின் மீதான தங்கியிருப்பதைக் குறைக்கும். அத்துடன் பூர்வீக அறிவைப் பாதுகாக்கும். மேலும் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கும்.
எனவே, சித்த மருத்துவ சுகாதார வசதிகளை மேம்படுத்துமாறும், மூலிகைத்தாவர பயிர்ச்செய்கைக்காக பொருத்தமான அரச காணிகளை இனங்கண்டு ஒதுக்குமாறும், வடக்கு மாகாணத்தில் மூலிகைப் பயிர்ச்செய்கை மற்றும் மருந்து பதப்படுத்தல் நிலையங்களை நிறுவுமாறும், விவசாயிகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் மூலம் ஆதரவளிக்குமாறும், மருத்துவ ஆராய்ச்சியை வலுப்படுத்துமாறும், இம்முயற்சிகளுக்குப் போதுமான நிதி ஒதுக்கீடுகளை உறுதிப்படுத்துமாறும் அரசாங்கத்தை நான் வலியுறுத்துகின்றேன்.
சித்த மருத்துவ சுகாதார சேவைகளை வலுப்படுத்துவதும் மூலிகைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதும் பொதுமக்கள் சுகாதாரத்தை மேம்படுத்தும். பூர்வீக மருத்துவ மரபைப் பாதுகாக்கும். அத்துடன் பிராந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் துணைபுரியும்.
எனவே, வன்னி மாவட்டங்கள் மற்றும் கல்மடு நகரில் உள்ள பொருத்தமான காணிகளுக்கு முன்னுரிமை அளித்து, பிரத்தியேகமான வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்தை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
எமது நாட்டில் மூன்று முக்கியமான பாரம்பரிய சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுர்வேதம், சித்தம், யுனானி என்பனவே அவையாகும். அதில் ஆயுர்வேத மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் இலங்கையிலே பல அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களினாலே உற்பத்தி செய்யப்படுகின்றது.
ஆனால், சித்த மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் இலங்கையிலே எங்கும் உற்பத்தி செய்யப்படுவதில்லை. வடக்கு மாகாணத்திலே சித்த மருத்துவத்திற்கு தேவையான மருந்துகள் மாகாணசபை காலத்திலே உற்பத்தி செய்வதற்கான ஆரம்பகட்ட செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், மிகவும் குறைந்த அளவிலேயே அந்த உற்பத்தி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
அந்தவகையிலே, சித்த மருத்துவத்திற்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்கின்ற தொழிற்துறையை ஆரம்பிப்பதன் ஊடாக எங்களுடைய மாகாணத்திலே இருக்கின்ற பல பிரச்சினைகளை தீர்க்கக்கூடியதாக இருக்கும்.
எங்களுடைய பாரம்பரிய மருத்துவ முறையை தொடர்ந்து பாதுகாப்பதற்கும் பக்கவிளைவற்ற மருந்துகளின் ஊடாக நோயற்ற வாழ்வை உருவாக்குவதற்கும்; அதேவேளை இந்த நாட்டிலே இப்போது நாங்கள் எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்ற வேலைவாய்ப்புக்கும் உதவும்.
தற்போது 2026 ஜனவரி மாதம் வரையிலே, இலங்கையிலே கிட்டத்தட்ட 2045 சித்த, யுனானி, ஆயுர்வேத மருத்துவ பட்டதாரிகள் வேலையற்ற பட்டதாரிகளாக உள்ளனர். அதில் 1,187 பேர் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்கின்றவர்களாக உள்ளனர்.
அந்தவகையிலே உற்பத்தி பொருளாதாரத்தை நோக்கி நகர்கின்ற இந்த நாடு சித்த மருந்து உற்பத்தியையும் மேற்கொள்ளுமாக இருந்தால் பல மருத்துவ பட்டதாரிகள் மற்றும் அத்தோடு தொடர்புடைய தொழிற்துறையை பயின்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பையும் வழங்கக்கூடியதாக இருக்கும்.
உதாரணமாக, எமது வவுனியா மாவட்டத்திலே நயினாமடு, கனகராயன்குளம், பம்பைமடு போன்ற பிரதேசங்களிலே மூலிகை தோட்டத்திற்காக காணிகள் ஒதுக்கப்பட்டு சிறு அளவிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால், போதுமான ஆளனி மற்றும் நிதிப்பற்றாக்குறை காரணமாக கூடியளவு மூலிகை செடிகளை உற்பத்தி செய்யமுடியாத நிலை காணப்படுகின்றது.
ஆகவே, அரசாங்கத்திடம் நான் கேட்டுக்கொள்வது, ஆளனி மாத்திரமல்ல இதற்கான நிதியையும் வழங்கவேண்டும். அந்தவகையிலே இந்த உற்பத்தியை இரண்டு வகையிலே முன்னெடுக்கலாம் எனும் கோரிக்கையினை நான் முன்வைக்கின்றேன்.
அரசாங்கத்திடம் உரிய நிதி இல்லாத சந்தர்ப்பத்திலே தனியார் துறைக்கு இந்த உற்பத்தியை செய்வதற்குரிய சந்தர்ப்பத்தினை வழங்கலாம். அல்லது அரசும் தனியாரும் (Public private partnership) இணைந்து இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கலாம்.
அந்தவகையில் கிளிநொச்சி கல்மடு நகரிலே சித்த மருத்துவ திணைக்களத்திற்கு சொந்தமான 100 ஏக்கர் காணி உள்ளது. ஏற்கனவே மாகாணசபையால் அது அபிவிருத்தி செய்யப்பட்டிருக்கின்றது. அங்கு 75 ஏக்கரிலே மூலிகைச் செய்கையை மேற்கொண்டு அதன்மூலம் கிடைக்கின்ற மூலிகைகளிலிருந்து ஏனைய 25 ஏக்கரிலே கட்டப்படுகின்ற தொழிற்சாலையினூடாக மருந்துகளை உற்பத்தி செய்வதனூடாக அந்தியச் செலாவணியையும் அரசாங்கம் பெறக்கூடியதாக இருக்கும். அதேவேளை வேலைவாய்ப்புக்களையும் வழங்கக்கூடியதாக இருக்கும். அதேபோல அந்த இடத்திலே சுற்றுலா மருத்துவத்தையும் அபிவிருத்தி செய்யக்கூடியாக இருக்கும்.
அந்தவகையிலே 2027 அல்லது இதற்குபின் சித்த மருத்துவத்திற்கு தேவையான மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு கெளரவ அமைச்சர் அவர்கள் ஆவன செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.


