இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்கள்; இருவர் உ**யிரிழப்பு.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 16 வயது மாணவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
அந்தவகையில், எம்பிலிப்பிட்டிய – இரத்தினபுரி வீதியின் உடவளவை 96ஆம் பகுதியில் இன்று (24) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கிரிந்திவெல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து மொனராகலை நோக்கி இரும்புத் தொகையை ஏற்றிச் சென்ற பாரவூர்தி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பாரவூர்திக்குள் சிக்கிய சாரதி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, கொஹுவளை பகுதியில் நேற்று (23) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொஹுவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எஸ்.டி.எஸ். ஜயசிங்க மாவத்தையில், நுகேகொடையிலிருந்து கொஹுவளை நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்றின் சாரதி வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பயணித்த உந்துருளி மற்றும் மகிழுந்து ஒன்றின் பின்னால் மோதியதை தொடர்ந்து முன்னோக்கிச் சென்று அருகிலிருந்த பேருந்து தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்த மாணவர் மீது மோதியுள்ளது.
இதனையடுத்து, பிரதான வீதியை நோக்கிப் பின்னோக்கிச் சென்ற மகிழுந்து, அங்கு பயணித்த மற்றுமொரு உந்துருளி மற்றும் மகிழுந்து மீது மோதியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த நுகேகொடை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மூவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரு விபத்துகள் தொடர்பாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


