சிங்கராஜா வனப்பகுதியில் உயிரினங்களை சேகரித்த சீனப் பிரஜைகளுக்கு பல கோடி ரூபாய் அபராதம்.!
சிங்கராஜா வனப்பகுதியின் இடைநிலை வலயத்தில் உள்ள உயிரினங்களை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு சீனப் பிரஜைகளுக்கு, 7 கோடியே 64 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து கலவானை நீதிவான் டி.எம். யசஸ்திரீ பிரியங்கிகா நேற்று திங்கட்கிழமை (23) தீர்ப்பளித்துள்ளார்.
41 பாதுகாக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட உயிரினங்களைப் பிடித்தமை மற்றும் தம்வசம் வைத்திருந்தமை உள்ளிட்ட 143 குற்றச்சாட்டுகளைப் பிரதிவாதிகள் மன்றில் ஏற்றுக்கொண்டதை அடுத்து, நீதிமன்றம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
உடவளவை தேசிய பூங்காவின் பனஹடுவ வனவிலங்குப் பாதுகாப்பு அலுவலகத்திற்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய, கடந்த 9ஆம் திகதி வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, சிங்கராஜா வனப்பகுதியின் இடைநிலை வலயத்தில் இலங்கைக்கு உரித்தான பூச்சி இனங்கள் மற்றும் ஊர்வனவற்றைச் சேகரித்துக் கொண்டிருந்த ஒரு பெண் உட்பட 4 சீனப் பிரஜைகள் வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, கலவானை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும், நேற்று திங்கட்கிழமை (23) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சந்தேகநபர்கள் குற்றத்தை ஒப்பக்கொண்டதை அடுத்து நீதிமன்றம் அவர்களுக்கு அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.


