காட்டுத் தீயால் ஏற்பட்ட புகைமூட்டம் – சிங்கப்பூர், மலேசியாவிடம் இந்தோனேசிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரல்!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக உருவான புகைமூட்டத்தால் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளிடம் அந்நாட்டு ஜனாதிபதி பிரபோவோ சுபியாந்தோ மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஆசியான் (ASEAN) உச்சி மாநாட்டின் அமர்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இந்த மன்னிப்பைக் கோரியுள்ளதாக இந்தோனேசிய ஜனாதிபதி மாளிகை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காட்டுத் தீயுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக இந்தோனேசிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்திலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காட்டுத் தீயைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்காகப் புதியதொரு அரச நிறுவனத்தை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இந்தோனேசியா வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டு வருவதாக பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரச் செயலாளர் மரியா தெரேசா லாசாரோ தெரிவித்துள்ளார்.


