ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி : ஆரம்பகட்ட சோதனைகள் வெற்றி
ரஷ்யா உருவாக்கியுள்ள தனிப்பயனாக்கப்பட்ட mRNA தொழில்நுட்பத்திலான புற்றுநோய் சிகிச்சைத் தடுப்பூசியான NeoOncovac, ஆரம்பகட்டத்தில் நம்பிக்கையளிக்கும் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஆய்வாளர்களின் தகவலின்படி, மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய நோயாளி ஒருவருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர், நான்கு மாத கண்காணிப்புக் காலத்தில் புதிய புற்றுநோய்க் கட்டிகள் எதுவும் கண்டறியப்படவில்லை.
அத்துடன், ஏற்கனவே கண்டறியப்பட்டிருந்த புற்றுநோய் பரவல்களும் மறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஆறு நோயாளிகளுக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இவை ஆரம்பகட்ட முடிவுகள் என்பதால், தடுப்பூசியின் செயல்திறனை உறுதிப்படுத்துவதற்கு மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் அறிவியல் ஆதாரங்கள் அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


