வாக்குறுதியை மறந்து அதைவிட கொடூர அடக்குமுறைச் சட்டங்கள்.!
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாகத் தேர்தல் காலத்தில் வாக்குறுதியளித்த தேசிய மக்கள் சக்தி அரசு, தற்போது அதற்குப் பதிலாக அதைவிடவும் ஆபத்தான அடக்குமுறை ஏற்பாடுகளைக் கொண்ட இரு புதிய சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது என்று மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் லஹிரு வீரசேகர தெரிவித்தார்.
பொதுமக்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பும் தொடர் போராட்டங்களுமே அரசைத் தற்காலிகமாகப் பின்வாங்கச் செய்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள மக்கள் போராட்ட இயக்கத்தின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“தேசிய மக்கள் சக்தி அரசு ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகிய இரண்டையும் உரிய வெளிப்படைத்தன்மையான சமூகக் கலந்துரையாடல்களின்றி அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
கடந்த 1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இரத்துச் செய்வதாக வாக்குறுதியளித்த அரசு, அதற்குப் பதிலாகப் புதிய அடக்குமுறைச் சட்டமூலங்களைக் கொண்டுவர முயற்சிப்பது எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் புதிய சட்டமூலங்களுக்கு மாற்றாக புதிய சட்டங்கள் எதுவும் அவசியமில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் பல்வேறு சிவில் அமைப்புகளும் தெளிவாக வலியுறுத்தியுள்ளன.
புதிய சட்டமூலங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள பரந்த வரையறைகளின்படி, ஜனநாயக ரீதியிலான ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தப் போராட்டங்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், செய்திகளை வெளியிடுதல் மற்றும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் வழங்குதல் போன்ற அடிப்படை உரிமைகள்கூட பயங்கரவாதக் குற்றங்களாகக் கருதப்படக்கூடிய பாரிய ஆபத்து உள்ளது.
அதேபோன்று, மூவர் இணைந்து அரச அதிகாரி ஒருவரின் கடமைக்கு இடையூறு விளைவித்தால்கூட அது ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம்’ என்பதாகச் சித்திரிக்கப்படக்கூடும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தன்னிச்சையாகத் தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கூடிய அதிகாரம் இச் சட்டமூலங்கள் மூலம் வழங்கப்படுகின்றது. இது நீதித்துறையின் தலையீட்டைக் கடுமையாகக் குறைக்கின்றது.
பொலிஸார் ஒருவரை 72 மணித்தியாலங்கள் வரை தடுத்து வைப்பதற்கும், பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றச் சாட்சியங்களாகப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும் ஏற்பாடுகள் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கும் சிவில் சுதந்திரத்துக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
ஏற்கனவே நடைமுறையிலுள்ள சாதாரண குற்றவியல் சட்டங்களைக் கொண்டே நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கையாள முடியும்.
பயங்கரவாதத் தடைச் சட்டமும் பொதுச் சொத்துகள் தொடர்பான சட்டமும் கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கல்களுக்கும் அரச ஒடுக்குமுறைகளுக்கும் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவற்றின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை உரிய நீதி நிலைநாட்டப்படவில்லை.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தச் சட்டமூலங்களில் சில திருத்தங்களை முன்மொழிந்திருந்தாலும், அவை சட்டமூலங்களின் அடிப்படை ஆபத்தான பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கவில்லை. பிரதி அமைச்சர் சுனில் வட்டகலவும் வரவு – செலவுத் திட்ட விவாதத்தின்போது இந்தச் சட்டமூலங்கள் மீண்டும் கொண்டுவரப்படலாம் எனக் கூறியிருப்பது அரசின் உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்துகின்றது.
நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் இந்த விடயத்தில் தீர்மானகரமான எதிர்ப்பை வெளிப்படுத்தத் தவறியுள்ளன. தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஊடகங்களின் தீவிர எதிர்ப்பே அரசைச் சற்றுப் பின்வாங்கச் செய்துள்ளது.
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, அமைச்சர் விஜித ஹேரத், பிரதி அமைச்சர்களான சுனில் வட்டகல, எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கடந்த காலங்களில் இத்தகைய அடக்குமுறைச் சட்டங்களுக்கு எதிராக நீதிமன்றங்களை நாடியவர்கள் என்பதை நினைவூட்ட விரும்புகின்றோம்.
எனவே, இந்த இரு சட்டமூலங்களையும் அரசு முழுமையாக மீளப்பெற வேண்டும். அதேவேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களுக்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது. அரசின் தற்போதைய பின்வாங்கல் தற்காலிகமானதே தவிர, எமது இறுதி வெற்றியல்ல.” – என்றார்.


