உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

சட்டமூலங்களை ஆராயாமலே நாடாளுமன்றத்தில் அரசு சமர்ப்பிப்பு.!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
81 பார்வைகள்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகிய இரண்டையும் மக்களின் இணக்கப்பாடன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தமை மூலம், அரசு இந்த இரு சட்டமூலங்களையும் முறையான ஆய்வுகளின்றி அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது என்பது தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்தார்.

களுத்துறையில் அமைந்துள்ள தனது அரசியல் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

“பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பான சட்டமூலம் ஆகியவற்றை மக்களின் இணக்கப்பாடன்றி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்போவதில்லை என ஜனாதிபதி தற்போது கூறுகின்றார். ஆனால், இந்த இரு சட்டமூலங்களும் ஏற்கனவே நாடாளுமன்றத்தின் முதலாம் வாசிப்புக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு, வர்த்தமானியிலும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், உயர்நீதிமன்றத்திலும் இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராகப் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்தான், இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் மக்களுடன் மீண்டும் கலந்தாலோசிக்கவுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறாயின், மக்களின் அடிப்படை உரிமைகளுடன் கடுமையாக முரண்படுகின்ற பாரிய இரு சட்டமூலங்களை, அரசு அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது எந்தவொரு ஆய்வும் செய்யாமலா என்ற கேள்வி எழுகின்றது.

சட்ட வல்லுநர்களுடனோ அல்லது சம்பந்தப்பட்ட தரப்பினருடனோ கலந்தாலோசிக்காமல் ஜனாதிபதி தலைமையிலான அரசு இதனை எவ்வாறு அமைச்சரவையில் அனுமதித்தது?

எதிர்க்கட்சிகளாகிய நாமும், வெளியில் தொழிற்சங்கங்களும் சிவில் அமைப்புகளும் வீதியில் இறங்கிப் போராடாமல் இருந்திருந்தால், அரசு இந்தச் சட்டமூலங்கள் குறித்துக் கடுகளவேனும் சிந்தித்திருக்காது. அந்த அளவுக்குச் சிறுபிள்ளைத்தனமாகவே அரசு செயற்பட்டு வருகின்றது.

அதேவேளை, அரசு இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் தனது சொந்தக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடனோ அல்லது தொழிற்சங்கங்களுடனோ கூடக் கலந்தாலோசிக்கவில்லை. அதனால்தான் ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இந்தச் சட்டமூலத்தின் பாரதூரம் தெரியாமல் அதனை ஊடகங்களில் நியாயப்படுத்தி வருகின்றார்கள்.

வரலாற்றில் பொலிஸாரின் அடக்குமுறைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான அரசு, பொலிஸாருக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கும் இத்தகைய சட்டமூலங்களைக் கொண்டுவந்திருப்பது வியப்பளிப்பதாக உள்ளது.

எவ்வாறாயினும், இந்தச் சட்டமூலங்கள் தொடர்பில் மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றமையை நாம் வரவேற்கின்றோம். என்றாலும், அரசு யாருடனும் கலந்தாலோசிக்காமல் தான்தோன்றித்தனமாகவே இதனை நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவந்தது.

சர்வதேச மட்டத்திலிருந்து வந்த கடுமையான அழுத்தங்கள் மற்றும் உள்நாட்டு எதிர்ப்புகளுக்குப் பின்னரே, ஜனாதிபதி இந்தச் சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ள இணங்கியுள்ளார். இந்த விடயத்தில் தற்போதைய அரசானது கோட்டாபய ராஜபக்ஷவின் அரச விடவும் பின்னடைவிலேயே இயங்குகின்றது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்க – ஆளுநர் பணிப்புரை!

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் சீர்செய்யுமாறும், நீண்டகால நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின்…

56 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளரிடம் 3 மணித்தியாலங்களிற்கும் அதிகமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் –…

65 0 0
இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

58 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

79 0 0