உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
9 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கொழும்பு வெள்ளப்பெருக்குக்கு மேயரின் அலட்சியமே காரணம்.!

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
77 பார்வைகள்

“கொழும்பு மாநகர சபை மேயர், நகரின் மழை வெள்ளப் பெருக்குக் குறித்துத் தவறான கருத்துக்களை வழங்கி வருகின்றார். அவர் லண்டன் போன்ற உலகளாவிய நகரங்களின் மேயராகத் தன்னைக் கற்பனை செய்துகொண்டு செயற்படுகின்றாரே தவிர, கொழும்பின் அடிப்படைப் பிரச்சினைகளைக் கூடத் தீர்க்கத் தெரியாதவராக இருக்கின்றார்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,
“கொழும்பு மாநகர சபையின் வடிகால் அமைப்பால் 30 முதல் 50 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சியை மட்டுமே தாங்க முடியும் என்றும், 129 மில்லிமீற்றர் மழை பெய்தமையாலேயே கொழும்பில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்றும் மாநகர நிர்வாகத்தால் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை.

கடந்த 1992ஆம் ஆண்டில் 440 முதல் 493 மில்லிமீற்றர் வரையிலும், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் 200 மில்லிமீற்றருக்கும் அதிகமாகவும் கொழும்பில் பலத்த மழை பதிவாகியிருந்தது. எனினும், கடந்த 32 ஆண்டுகளில் (1992 முதல் 2024 வரை) கொழும்பு தேசிய வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வரலாற்றில் ஒருபோதும் இதுபோன்று நீரில் மூழ்கியதில்லை.

வடிகால்களும் கால்வாய்களும் உரிய முறையில் துப்பரவு செய்யப்படாமல் கழிவுகளால் அடைபட்டுப் போயிருந்தமையே, குறுகிய நேர மழையினால் உடனடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் வடிந்தோட முடியாமல் பல மணிநேரம் வீதிகளில் தேங்கி நின்றதற்கு முதன்மைக் காரணமாகும்.

எல் நினோ காலநிலை மாற்றத்தின் காரணமாக ஒக்டோபர் இறுதி முதல் நவம்பர் மாத காலப்பகுதியில் கடுமையான மழைவீழ்ச்சி ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் நான்கு மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற பேரிடர் முகாமைத்துவக் கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன்.

இந்தக் காலநிலை முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து, எதிர்வரும் கனமழையை எதிர்கொள்ளும் வகையில் கொழும்பின் வடிகால்களை அவசரமாகத் துப்பரவு செய்யுமாறு பிரதமரும் உத்தியோகபூர்வமாக உத்தரவிட்டிருந்தார். இவ்வாறான ஆவணப்படுத்தப்பட்ட உத்தரவுகளும் எச்சரிக்கைகளும் இருந்தபோதிலும், நவீன தொழில்நுட்ப வசதிகள் கைவசம் இருந்தும் கொழும்பு மாநகர நிர்வாகம் திட்டமிட்டு அலட்சியமாகச் செயற்பட்டுத் தமது கடமையை முற்றாகக் கைவிட்டுள்ளது.

ஒரு மாநகர சபையின் முதன்மையான பொறுப்பு என்பது நாளாந்தம், வாராந்தம் மற்றும் மாதாந்த அடிப்படையில் குப்பைகளை அகற்றுவது, வடிகால்களைச் சீரமைப்பது, டெங்கு நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் புகை விசிறல் மற்றும் உடைந்த வீதி விளக்குகளைப் பழுதுபார்ப்பது போன்ற அடிப்படைச் சேவைகளை வழங்குவதாகும்.

அத்துடன் வெளிமாவட்டங்களிலிருந்து கொழும்புக்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான சுத்தமான மலசலகூடங்கள், ஆடை மாற்றும் இடங்கள் மற்றும் தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான இடங்கள் போன்ற அடிப்படை வசதிகளைக் கூட தற்போதைய மாநகர நிர்வாகத்தால் ஏற்படுத்த முடியவில்லை.

தேர்தல் காலத்தில் கொழும்பு நகரை உலகின் மிக நவீன நகரமாக மாற்றுவோம் என்றும், சகல துறைகளிலும் துறைசார் விஞ்ஞானிகள் தம்மோடு இருக்கின்றனர் என்றும் வாக்குறுதி அளித்தவர்கள், தற்போது புறக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒரு கண்காணிப்புக் கமராவைப் பொருத்தி வர்ணம் பூசுவதையும், சிறியதொரு வடிகால் அமைத்ததை முகநூலில் பதிவிடுவதையும் மட்டுமே பெரிய சாதனைகளாக விளம்பரப்படுத்துகின்றனர்.

கொழும்பு மாநகர சபை என்பது பொதுமக்களின் வரிப்பணம் மற்றும் கோடிக்கணக்கான குப்பை அகற்றும் ஒப்பந்தங்கள் மூலம் பெரும் வருமானத்தைக் கொண்ட ஒரு செல்வந்த அமைப்பாகும். அரசிடமிருந்து கூடுதல் நிதி பெறத் தேவையில்லாத அளவுக்கு மாநகர சபைக் கணக்குகளில் பெருமளவு நிதி தேங்கிக் கிடக்கின்ற போதிலும், அதனை மக்கள் நலனுக்காகவும் வடிகால் பராமரிப்புக்காகவும் திட்டமிட்டுச் செலவிட நிர்வாகத்துக்குத் தெரியவில்லை.

இதன் விளைவாகவே மாளிகாவத்தை, புறக்கோட்டை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி, திம்பிரிகஸ்யாய மற்றும் ஜாவத்தை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதோடு, இரவு 11 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் சிறிய வீடுகளில் வசிக்கும் குறைந்த வருமானம் பெறும் மக்களின் குளிர்சாதனப் பெட்டிகள், தொலைக்காச்சிகள் போன்ற பெறுமதியான உடைமைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான பாரிய அனர்த்தத்தின் போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களையோ அல்லது ஏனைய மக்கள் பிரதிநிதிகளையோ ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்காமல் மாநகர நிர்வாகம் புறந்தள்ளி ஒதுக்கி வைத்துள்ளது.

எனவே, வரி செலுத்தியும் உரிய சேவைகளைப் பெறத் தவறியமைக்காகவும், அடிப்படை உரிமை மீறல்களுக்காகவும் மாநகர சபைக்கும் அதன் தலைமைக்கும் எதிராக நீதிமன்றத்தை நாடுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

தம்மை லண்டன் மேயர் போல நினைத்துக்கொள்ளும் தற்போதைய மாநகரசபை மேயர் கொழும்பை நிர்வகிக்கும் தகுதியற்றவர். அவர் செய்தி வாசிப்பது அல்லது சந்தைப்படுத்தல் போன்ற பணிகளுக்கே பொருத்தமானவர். எனவே அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். தவறினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்க – ஆளுநர் பணிப்புரை!

யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியில் அவதானிக்கப்பட்டுள்ள குறைபாடுகளை நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் சீர்செய்யுமாறும், நீண்டகால நோக்கில் நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட தொடர்புடைய தரப்பினரின்…

56 0 0
இலங்கை செய்திகள்

தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளரிடம் 3 மணித்தியாலங்களிற்கும் அதிகமாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை!

கிளிநொச்சி மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அமைப்பாளர் கனகசபை  கணேசகுமாரன்  மீது 3:30 மணி நேரம் யாழ்ப்பாணம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் –…

65 0 0
இலங்கை செய்திகள்

கதிரியக்கவியலாளர் பதவி நிலை உள்ளீர்ப்பு வர்த்தமானிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கதிரியக்கவியலாளர் (Radiographer) பதவி நிலைக்கான பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள பட்டதாரிகளைச் சேவையில் உள்ளீர்ப்பதற்காக வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக, இலங்கை மனித…

58 0 0
இலங்கை செய்திகள்

தேரர்களின் சத்தியாக்கிரகத்தில் கைதானவர் ஹெரோயின் பயன்படுத்தியமை உறுதி!

அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரரருடன்  இருந்தபோது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவர்…

79 0 0