மீண்டும் போ@தைப்பொருள் பாவனைக்குத் திரும்புவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்கள் மீண்டும் போதைப்பொருள் பாவனைக்குத் திரும்புவதில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் புனர்வாழ்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 13 சதவீதத்துக்கும் அதிகமான முன்னேற்றத்தைக் காட்டுவதாக அதன் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம்.எஸ். ஹமீத் தெரிவித்துள்ளார்.
“முழுநாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
புனர்வாழ்வு பெற்றவர்களில் 14 சதவீதமானோர் ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
ஹோட்டல் துறையினரின் கோரிக்கைக்கு இணங்க, கம்பஹா மற்றும் தென் பகுதியின் பல்வேறு மாவட்டங்களை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 9 ஆம் திகதி தம்புள்ளை மற்றும் சீகிரியா பிராந்தியங்களில் உள்ள முக்கிய சுற்றுலா ஹோட்டல்களின் ஊழியர்களுக்காகவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, புனர்வாழ்வுக்குப் பின்னர் எவ்வித ஆபத்தான போதைப்பொருட்களையும் பயன்படுத்தாதோரின் சதவீதம் 31.4 ஆக இருந்தது.
எனினும், இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இது 45.18 சதவீதமாக குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 13.74 சதவீத முன்னேற்றமாகும். அதேபோன்று, புனர்வாழ்வுக்குப் பின்னர் போதைப்பொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்துவோரின் சதவீதம் 24.5 இல் இருந்து 19.21 சதவீதமாக 5.34 சதவீதத்தினால் குறைந்துள்ளது.
நாடு முழுவதும் போதைப்பொருள் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ள நபர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 076 96 27 761 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சட்டம் உங்களை புனர்வாழ்வுக்காக அழைத்துச் செல்லும் வரை காத்திருக்காமல், இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சுயவிருப்பத்தின் பேரில் உங்களைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு அவர் மேலும் அழைப்பு விடுத்தார்.


