சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து ஐக்கிய மக்கள் சக்தி அரசின் மீது கடும் சாடல்.!
தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பொதுமக்களின் பணத்தையும் அரச சொத்துக்களையும் பாதுகாப்பதாக வாக்குறுதியளித்தே ஆட்சிக்கு வந்த போதிலும், இன்று அந்த வாக்குறுதிகள் முற்றுமுழுதாக மீறப்பட்டுள்ளதாக ஊழல் ஒழிப்புப் படையின் அழைப்பாளர் நிரோஷன் பாதுக்க தெரிவித்துள்ளார்.
எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தரம் குறைந்த 19 நிலக்கரி கப்பல்களை இறக்குமதி செய்ததன் மூலம் நாட்டிற்கு 18,000 மில்லியன் ரூபாய் நிதி நட்டம் ஏற்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.
இந்த ஊழல் தொடர்பான தகவல்கள் தணிக்கையாளர் நாயகம், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழு ஆகியவற்றின் அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த நிதி இழப்புக்கு மத்தியில் பாடசாலை மாணவர்கள் கல்வி கற்கும் வேளையில் தினசரி இரண்டு மணிநேர மின்வெட்டைப் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், 2.5 மில்லியன் டொலர் தொகை மற்றும் தபால் திணைக்களத்திலிருந்து செலுத்தப்பட வேண்டிய 6 இலட்சம் டொலர் பணம் காணாமல் போனமை குறித்து ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இதுவரை எந்தவொரு தெளிவுபடுத்தலையும் வழங்கவில்லை என்று தெரிவித்த அவர், நாட்டின் நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் திறைசேரியைப் பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி, பேருவளை மற்றும் பதுளை போன்ற பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் உரையாற்றிய போதிலும் இந்தக் காணாமல்போன நிதியைப் பற்றி நாட்டு மக்களுக்கு எதையும் வெளிப்படுத்தவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.
சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் நடைபெறாது என ஜனாதிபதி கூறிவரும் நிலையில், நாடாளுமன்றத்தில் 35,000 சதுர அடி வசதிகளைக் கொண்ட உத்தியோகபூர்வ இல்லம் இருக்கும்போதே, சபாநாயகரும் அவரது செயலாளரும் சட்டவிரோதமான முறையில் அரசாங்க வீடுகளைப் பெற்றுள்ளதாகவும், அதற்கு எதிராக இதுவரை சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
சபாநாயகரின் இந்த ஊழல் நடவடிக்கைகளை வெளிப்படுத்தி நாடாளுமன்றப் பொதுச் செயலாளர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், 47 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் தயார் செய்துள்ளன.
அத்துடன், சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், ஆணைக்குழுவிற்குத் தகவல்களை வழங்க வேண்டாம் என நாடாளுமன்ற அதிகாரிகளுக்குச் சபாநாயகர் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மதுபானப் போத்தல்களில் ஒட்டப்படும் ஸ்டிக்கர் ஊழல் குறித்துப் பேசிய அவர், அரசாங்கம் புதிய கேள்விப்பத்திரங்களை கோரும்போது ISO 37001 இலஞ்ச ஒழிப்பு மேலாண்மைத் தர நிபந்தனையை நீக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் கடந்த காலத்தில் ஊழல்களில் ஈடுபட்ட மற்றும் தொலைபேசி, மின்கலன்களை இறக்குமதி செய்யத் தகுதியற்ற நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்க நிதி அமைச்சு முயல்வதாகவும், இதன் மூலம் நாட்டின் பிரதான வருமான வழியொன்றை அரசாங்கம் இல்லாமல் செய்யப் பார்ப்பதாகவும் அவர் சாடினார்.
இறுதியாக, அரசாங்கம் அபிவிருத்தியை விடுத்து அடக்குமுறையையே தெரிவு செய்துள்ளதாகத் தெரிவித்த நிரோஷன் பாதுக்க, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் மூலம் எந்தவொரு பொலிஸ் அல்லது நிறைவேற்று அதிகாரியும் நீதிமன்றக் பிடியாணை இன்றி எவரையும் கைது செய்யவும் தடுப்புக் காவலில் வைக்கவும் அதிகாரம் வழங்க முயற்சிப்பது அடிப்படை உரிமைகளுக்கும் அரசியலமைப்பிற்கும் முரணானது என்றும், நாட்டை ஆட்சி செய்யும் சக்தி இல்லாத அரசாங்கம் தனக்கு எதிரானவர்களை அடக்குவதற்கே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இதற்கு மேல் அரசாங்கம் ஆட்சியில் நீடிக்க இடமளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.


