எரிபொருள் விலை நிவாரணம்; திறைசேரியின் நிதி ஒதுக்கீடு, மானிய விநியோகம் குறித்து சாணக்கியன் கேள்வி.!
2026 நவம்பர் 6 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில், எரிபொருள் விலை நிவாரணத்திற்காக திறைசேரியிலிருந்து ஒதுக்கப்படும் நிதி, எரிபொருள் மானியங்களின் பயன்பாடு மற்றும் மக்களுக்கான நிவாரணங்களின் உண்மையான பயன்கள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.
நாட்டில் வாழ்க்கைச் செலவுகள் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஒக்டோபர் மாதத்தில் முதன்மைப் பணவீக்கம் 8.3 சதவீதமாகவும், உணவுப் பணவீக்கம் 8.8 சதவீதமாகவும் உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, நவம்பர் 2 ஆம் திகதி எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளும் 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இறக்குமதி விலையை விடக் குறைந்த விலைக்கே இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்யப்படுவதாகப் பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தைச் சாணக்கியன் கேள்விக்குட்படுத்தினார்.
டீசல் 307 ரூபாவுக்கும், பெற்றோல் 322 ரூபாவுக்கும் இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய விற்பனை விலை உண்மையில் இறக்குமதிச் செலவுக்கு இணையானதா அல்லது அதற்குக் குறைவானதா என அரசாங்கத்திடம் விளக்கம் கோரினார்.
மேலும், கடந்த ஏப்ரல் மாதம் மின்சாரக் கட்டணம் 10.3 சதவீதத்தாலும், அதனைத் தொடர்ந்து 18 சதவீதத்தாலும் அதிகரிக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், 2026 ஆம் ஆண்டின் அடுத்த காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ள நிலையில், தற்போது கட்டண அதிகரிப்பு அவசியமில்லை என தேசிய மின்கட்டமைப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளமை தொடர்பிலும் தெளிவுபடுத்துமாறு கோரினார்.
டீசலுக்கு தற்போது வழங்கப்படும் 70 ரூபாய் நிவாரணத்தை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அந்த நிவாரணத்தைத் தொடர்வதற்கான அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
நிதி அமைச்சின் 2026 ஆம் ஆண்டுக்கான இடைக்கால அரச நிதிக்கூற்று அறிக்கையின்படி, 2026 ஜூன் மாத இறுதியில் திறைசேரியின் கையிருப்பு 690.3 பில்லியன் ரூபாவாக இருந்ததாகக் குறிப்பிட்ட சாணக்கியன், திறைசேரியில் இவ்வளவு நிதி கையிருப்பில் இருக்கும்போது எரிபொருளுக்கு மேலதிக வரிகளை ஏன் அறவிட வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார். நிதி வசதிகள் காணப்படுமாயின், அந்த நிதியை மக்களுக்கு நேரடியாக நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் 57 பில்லியன் ரூபாய் எரிபொருள் மற்றும் மின்சார மானியங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படும் நிலையில், அதில் 41 பில்லியன் ரூபாய் ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கும், 15 பில்லியன் ரூபாய் மின்சாரக் கட்டண மானியத்திற்கும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதே காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 29.2 பில்லியன் ரூபாய் தேறிய இலாபத்தைப் பதிவு செய்துள்ளதாகவும், அதற்கு அரசாங்கத்தின் நிவாரண வழங்கல் பிரதான காரணமாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த ஆண்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு செலுத்த வேண்டிய கடன்களுக்காக திறைசேரி ஊடாக 750 மில்லியன் ரூபாய் மக்களின் வரிப்பணம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இலாபம் குறித்த அறிக்கைகள் வெளியிடப்படுகின்ற நிலையில், அந்த நிறுவனத்தின் பிரதான நோக்கம் இலாபம் ஈட்டுவதா அல்லது மக்களுக்கு சேவையாற்றுவதா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதன்போது, எரிபொருள் மானியங்கள் மற்றும் திறைசேரியின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக அரசாங்கத்திடம் பல முக்கிய கேள்விகளை இரா. சாணக்கியன் முன்வைத்தார்.
2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் திறைசேரியால் வழங்கப்பட்ட மொத்த எரிபொருள் மானியத் தொகை எவ்வளவு? அதில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு? ஏனைய எரிபொருள் விநியோக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு?
எரிபொருள் மற்றும் மின்சாரக் கட்டண நிவாரணங்களுக்காக திறைசேரி மாதாந்தம் செலவிடும் மொத்தத் தொகை எவ்வளவு?
2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 95 ரக பெற்றோல், ஓட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விற்பனை அளவுகள் என்ன?
2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கப்பட்ட முழுமையான 41 பில்லியன் ரூபாய் மானியமும் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள் ஊடாக நுகர்வோருக்கு முழுமையாகக் கிடைத்ததா?
தற்போதைய மாதாந்திர எரிபொருள் மானியச் செலவைக் கருத்திற்கொள்ளும்போது, திறைசேரியின் கையிருப்பிலுள்ள நிதியைக் கொண்டு இன்னும் எத்தனை மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தைத் தொடர முடியும்? சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலைகள் மேலும் அதிகரித்தாலும், 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னரும் அரசாங்கம் எரிபொருள் நிவாரணத்தைத் தொடருமா?
பொதுப்போக்குவரத்து, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு இலக்கு அடிப்படையிலான நிவாரணம் அவசியம்.
எரிபொருள் நிவாரணங்களை வழங்கும்போது பொதுப்போக்குவரத்துத் துறைக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என இரா. சாணக்கியன் வலியுறுத்தினார்.
பொதுப்போக்குவரத்துத் துறைக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதன் மூலம் போக்குவரத்துக் கட்டணங்களை குறைக்க முடியும் என்றும், அதன் நேரடிப் பயன் நடுத்தர வருமானம் கொண்ட மக்களைச் சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலதிக கேள்விகளை முன்வைத்தபோது, ஏற்கனவே இரண்டாவது முறையாக எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது முறையாகவும் நிவாரண நிதி ஒதுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலப்பகுதியில் பெரும்போக விவசாயச் செய்கை ஆரம்பமாகவுள்ள நிலையில், தற்போதைய டீசல் விலை அதிகரிப்பினால் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான செலவு இருமடங்காக அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, விவசாயிகள் மற்றும் கடற்றொழிலாளர்களை இலக்காகக் கொண்டு எரிபொருள் நிவாரணங்களை வழங்குவதன் மூலம் விவசாய மற்றும் மீன்பிடி உற்பத்திச் செலவுகளைக் குறைக்க முடியும் எனத் தெரிவித்தார்.
அதேவேளை, தற்போது மெகா நிவாரணத் திட்டத்தின் பயனாளிகளுக்கும் எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், எரிபொருள் நிவாரணங்களை வழங்கும்போது உண்மையில் அதிக பாதிப்பை எதிர்கொள்ளும் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் ஏனைய உற்பத்தித் துறையினரை அடையாளம் கண்டு இலக்கு அடிப்படையில் நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதனுடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பிலும் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தார்.
குறித்த விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி பெற்றுத் தருவதாக அமைச்சர் லால் காந்த ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், இதுவரை அதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடுவதற்கான சந்தர்ப்பத்தை விரைவில் ஏற்படுத்தித் தருமாறு அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
எரிபொருள் விலை நிவாரணம், திறைசேரியின் நிதி ஒதுக்கீடுகள், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மானியப் பயன்பாடு, விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான இலக்கு அடிப்படையிலான நிவாரணங்கள் எனப் பல்வேறு பொருளாதார மற்றும் மக்கள் நலன் சார்ந்த விடயங்களை உள்ளடக்கியதாக அவரது நாடாளுமன்ற உரை அமைந்திருந்தது.


