தவறு செய்யாத மக்கள் பயப்படத் தேவையில்லை : புதிய சட்டமூலங்கள் குறித்து பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க விளக்கம்!
அரசு புதிய சட்டங்களை இயற்றுவது நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அன்றி, மக்களை அடக்குவதற்காக அல்ல என்று பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
அத்துடன், எவ்வித தவறும் செய்யாத பொதுமக்கள் அரசால் கொண்டுவரப்படும் புதிய சட்டமூலங்கள் குறித்து எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசு என்ற ரீதியில் கடந்த காலங்களில் மக்களுக்குப் பாதகமான எந்தவொரு தீர்மானத்தையும் நாம் எடுக்கவில்லை. எதிர்க்கட்சிகள் சில புதிய சட்டமூலங்கள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்க முற்படுகின்றன.
நாட்டில் உண்மையிலேயே பொதுமக்கள் இந்தச் சட்டமூலங்கள் குறித்து அச்சமடைந்திருந்தால், அவர்கள் இலட்சக்கணக்கில் வீதிக்கு இறங்கிப் போராடியிருப்பார்கள். ஆனால், ஒரு சில அரசியல் தலைவர்கள் மட்டுமே அச்சமடைந்துள்ளனர். மக்களுக்கு வழக்கம் போல் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்யவும், தமது கருத்துகளைச் சுதந்திரமாகத் தெரிவிக்கவும் முழுச் சுதந்திரம் உள்ளது.
தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமையவே அரசு தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என நாம் அறிவித்திருந்தோம். அதற்கான சட்ட நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, நாட்டையும் அரசையும் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதற்குத் தேவையான புதிய பாதுகாப்புச் சட்டங்களை இயற்றவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
சட்டம் என்பது செல்வந்தர்கள், ஏழைகள் அல்லது தகுதித் தராதரங்களைப் பார்த்துச் செயற்படாது. கடந்த காலத்தில் சட்டத்துக்கு மேலே தங்களைச் சித்திரித்துக்கொண்ட பலர், இன்று நீதிமன்றங்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவுகளுக்கு வரிசையாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தவறான கொள்வனவுகள் மற்றும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகளும் சட்டத்தின் பிடியில் சிக்குண்டு வருகின்றனர். எனவே, தவறு செய்யாத பொதுமக்கள் எவரும் இந்தப் புதிய சட்டமூலங்கள் குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்லை.” – என்றார்.


