கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் ஹிஜாப் வழக்கு எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்ட ஹிஜாப் பிரச்சனையை தொடர்ந்து வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் வைத்தியர் சுகுணனுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட கூற்றுக்கள் தொடர்பாக வைத்தியர் சுகுணன் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ஜுனா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரிஸ் உட்பட ஆறு பேருக்கு எதிராகவும், இரண்டு முகநூல் மற்றும் யூரியூப் தளங்களுக்கு எதிராகவும் இந்த வழக்கானது தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நிகழ்நிலைகாப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கமானது மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.தர்சினி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது.
அந்தவகையில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ஜுனா, முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹாரிஸ் உட்பட பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இந்தநிலையில் பிரதிவாதிகள் சார்பில் மன்றில் ஆஜராகியிருந்த ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தலைமையிலான 13 சட்டத்தரணிகளால் பிரதிவாதிகளினால் தங்களுக்கான காரணம் காட்டல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில் இந்த வழக்கானது சிலரது காரணம் காட்டலுக்காக எதிர்வரும் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் பிரதிவாதிகளில் ஒருவரான முன்னாள் பிரதிக்கல்விப்பணிப்பாளர் முக்தார் நீதிமன்றில் ஆஜராகியிருந்து நிபந்தனைக்குட்பட்ட வகையில் தாங்கள் நடந்துகொள்வதாகவும் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்குமாறு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையினுடைய பணிப்பாளர் வைத்தியர் சுகுணன் சார்பாக சட்டத்தரணி கணகலிங்கம் கிஸோபனா ஆஜாராகியமை குறிப்பிடத்தக்கது.







