ஜனாதிபதி செயலகம் முன்பாக பிக்குகள் தொடர் போராட்டம்.!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, கண்டி தலதா மாளிகைக்கு அருகிலிருந்து சுதந்திரப் பாதயாத்திரையாக கொழும்புக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக வீதியில் அமர்ந்து தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஞானசார தேரரின் விடுதலை விவகாரத்தில் ஜனாதிபதி தீர்க்கமான முடிவை எடுக்கத் தவறி வருவதாகவும், நாட்டில் மதச் சமத்துவத்தை உறுதி செய்யவில்லை என்றும் குற்றஞ்சாட்டி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பௌத்த பிக்குகள் மற்றும் சமூக அமைப்புகள் இணைந்து இக்கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தன.
இப்போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜன அரகலயே புரவசி சங்கவிதானயவின் (மக்களின் போராட்டப் பிரஜைகள் அமைப்பு) செயலாளரும் சமூக ஆர்வலருமான சானக்க பண்டார, ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி எவ்வித உறுதியான முடிவையும் எடுக்காமல் மாதக்கணக்கில் காலம் தாழ்த்தி வருவதாகக் கடுமையாகச் சாடினார்.
தற்போதைய தலைமைத்துவத்தின் இந்தத் தயக்கமும் காலந்தாழ்த்தலும் மக்கள் மத்தியில் பெரும் கேள்விகளையும் அதிருப்தியையும் உருவாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர்,
நாட்டில் மார்க்சிச சிந்தனை கொண்ட ஆட்சி நிலவுவதாகக் குறிப்பிட்டதுடன், பௌத்தர்களுக்கு மட்டுமே அதிகளவிலான சலுகைகளும் முன்னுரிமைகளும் வழங்கப்படுவதாக வெளியில் தோற்றம் காட்டப்பட்ட போதிலும், நடைமுறையில் இந்த அரசாங்கத்தின் கீழ் பௌத்த விழுமியங்களின் சீரழிவே நிகழ்கிறது என்று குற்றம் சுமத்தினார்.
அத்துடன், பிற மதத்தவர்களுடனான நல்லிணக்கமும் தற்போதைய ஆட்சியில் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பௌத்த தேரர்களைச் சீரழிவிலிருந்து விடுவித்து, நாட்டில் வாழும் அனைத்து மதங்களையும் சமமாகப் பாதுகாக்க வேண்டிய வரலாற்றுப் பொறுப்பு ஜனாதிபதிக்கே உள்ளது என்பதை அவர் வலியுறுத்தினார்.
நாட்டின் பல்வேறு காலகட்டங்களில் முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகங்கள் பல வழிகளில் உதவிகளைச் செய்துள்ள நிலையில், தற்போதைய பௌத்த தேரர்கள் தொடர்பான விவகாரத்தில் அரசாங்கம் பாரபட்சமான முறையில் நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு ஜனாதிபதிக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த சானக்க பண்டார, இந்த விடுதலை தாமதமாவதற்கான உண்மையான காரணம் என்ன என்ற கேள்வியையும் எழுப்பினார்.
நாட்டின் அனைத்து மக்களும் சம உரிமையுடன் வாழ்வதற்கான சூழலை அரசாங்கம் உருவாக்கத் தவறும் பட்சத்தில், இதற்கு எதிரான தொடர் போராட்டங்களும் அழுத்தங்களும் தீவிரமடையும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தை வந்தடைந்த பிக்குகள், ஜனாதிபதியின் செயலாளர் தலைமையிலான அதிகாரிகளைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இதன்போது மகா சங்கத்தினரின் கோரிக்கைகள் தொடர்பில் சுமார் ஒரு மாத காலத்திற்குள் பதிலளிக்கப்படும் என ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், பதிலளிப்பதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள பிக்குகள், தமது கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கான உறுதியான திகதியொன்றை அறிவிக்குமாறு வலியுறுத்தி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகத் தரையில் அமர்ந்து போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
போராட்டம் இடம்பெறும் பகுதியில் தற்காலிகக் கூடாரமொன்றை அமைப்பதற்கு பிக்குகள் முயற்சித்தபோது, அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதுடன், பின்னர் பொலிஸாரின் உத்தரவுக்கமைய குறித்த கூடாரம் வீதியின் ஓரப்பகுதிக்கு நகர்த்தப்பட்டது.
தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பிக்குகள் நன்மை வேண்டி பிரித் பாராயணத்திலும் ஈடுபட்ட போதிலும், தமது கோரிக்கைகளுக்குத் தெளிவான பதில் வழங்கப்படாத நிலையில் அங்கிருந்து வெளியேறாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியில் விசேட பொலிஸ் குழுக்கள் பல பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இப்போராட்டம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர், புத்தபிரானின் தருமத்தையும் சீவரப் பாரம்பரியத்தையும் அழிக்க முற்படும் அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு எதிராக, வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி ஆறு நாட்கள் வெயில் மற்றும் மழையைப் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பிக்குகள் கொழும்பில் ஒன்றுகூடியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
நேற்று ஜனாதிபதி செயலக அதிகாரிகளுடன் சுமூகமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், நியாயமான தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்த அவர், ஞானசார தேரரை விடுதலை செய்யாமல் மகா சங்கத்தினர் இங்கிருந்து செல்லும் எண்ணத்தில் இல்லை என்றும், மாரனாலேயே தோற்கடிக்க முடியாத துறவிகளை அரசாங்கத்தால் தோற்கடிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர், காடாரண்யவாசி மற்றும் கிராமவாசி பிக்குகள் ஒன்றிணைந்து கொழும்பிற்கு பாதயாத்திரையாக வந்திருப்பது வரலாற்றில் முதன்முறையாகும் என்றும், அரசாங்கமும் ஜனாதிபதியும் அரசியலமைப்பின் 9 ஆம் பிரிவுக்கு அமைவாக புத்தசாசனத்தைப் பாதுகாத்து போஷிக்கும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் 34(1) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு உடனடியாக பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிய அவர், அவ்வாறு செய்யத் தவறினால் ஜனாதிபதி தனது பதவியை விட்டு விலக நேரிடும் அல்லது ஞானசார தேரரை விடுதலை செய்ய நேரிடும் எனத் தெரிவித்ததுடன், கோரிக்கைகள் நிறைவேறும் வரை பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவே தொடர்ந்து தங்கியிருப்போம் என்றும் எச்சரித்தார்.






