இ.போ.ச பருத்தித்துறை சாலை பேருந்தின் சாரதி, மற்றும் நடத்துநருக்கு தொடர் அச்சுறுத்தல்!
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களால் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக பருத்தித்துறை போக்குவரத்து சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
பல தடவைகள் வடமராட்சி கிழக்கு பகுதியில் வைத்து தங்களுடைய பேருந்துகளை மறித்து பலரும் தமது சாரதிகளை அச்சுறுத்தி வருவதாகவும், இவ்வாறான நிலையில் சேவை வழங்குவதில் தாம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாகவும் பருத்தித்துறை சாலை முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும், தனியார் போக்குவரத்து சங்கத்திற்கும் இடையில் பல்வேறு முரண்பாடுகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த விடயங்கள் தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அதன் தலைவரால் பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டிருந்ததாகவும், ஆனாலும் தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இலங்கை போக்குவரத்து சபை மீது தொடர்ச்சியாக வன்முறைகளை பிரயோகித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அந்தவகையில் இன்றையதினமும் கேவில் பகுதியிலிருந்து பருத்தித்துறை நோக்கி வருகை தரவிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்திற்கு முன்பாக தனது உந்துருளியை நிறுத்திவிட்டு அதற்குள் ஒருவர் சென்று சாரதியுடன் முரண்பட்ட காணொளியொன்றும் வெளியாகி உள்ளது.
குறித்த காணொளியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் நபர் ஒருவர் ஏறி பேருந்தை நிறுத்துவது மற்றும் முரண்படும் காட்சிகள் பதிவாகியுள்ளன.





