நுவரெலியாவில் கனமழை; மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் கன மழை பெய்து வருகிறது.
குறிப்பாக நீர் ஏந்து பகுதிகளான மேல் கொத்மலை, மவுசாகலை கொத்மலை, காசல்ரீ, விமலசுரேந்திர, கென்யோன், புரோட்லேன்ட், லக்சபான, பொல்பிட்டிய, நவலக்சபான, கலுகல ஆகிய நீர்த்தேக்க பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
டயகம பகுதியில் ஆரம்பிக்கும் மகாவலி கங்கை அதன் கிளை ஆறுகள், ஓடைகள், டெவோன் நீர்வீழ்ச்சி, ஹட்டன் ஓயா, போடைஸ் ஓயா, கெசல்கமு ஓயா, மரே ஓயா, சியத்தலகங்குல ஓயா, காட்மோர் ஓயா, சாமிமலை ஓயா, சென் கிளையர் நீர்வீழ்ச்சி, மோகினி எல்ல நீர்வீழ்ச்சி, மரே நீர்வீழ்ச்சி, காட்மோர் நீர்வீழ்ச்சி, லக்சபான நீர்வீழ்ச்சி ஆகியவற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிகள், கங்கைகள் மற்றும் ஓடைகள், ஆறுகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனால் பெருந்தோட்ட தொழிலாளர்கள், பண்ணையாளர்கள், விவசாயிகள், பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கபட்டு வருகின்றனர்.
ஒரு சில பகுதிகளில் அதிக அளவில் பனிமூட்டம் நிலவுகிறது. இதன் காரணமாக மலையக பகுதியில் உள்ள அனைத்து சாரதிகளும் வாகனங்களை செலுத்தும் போது மிகவும் அவதானமாக செலுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன் சாலைகள் வழுக்கும் நிலையில் உள்ளதால் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு ஹட்டன் வலய காவல்துறை தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

