கோயில் மற்றும் விகாரையில் கொள்ளை.!
கலஹா நகரில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்த பணம் இனந்தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கலஹா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ள கதவை உடைத்துக்கொண்டு குறித்த நபர்கள் ஆலயத்திற்குள் நேற்று இரவு பிரவேசித்துள்ளனர்.
இந் நிலையில், ஆலயத்திற்குள் இருந்த அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பணத்தைக் குறித்த நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதேவேளை, கலஹா உடதெல்தோட்டை பகுதியில் அமைந்துள்ள விகாரையில் இருந்த மாணிக்கக்கல்லை (Zircon) இனந்தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இச் சம்பவம் நேற்று பதிவாகி உள்ளது என கலஹா பொலிசார் தெரிவித்தனர்.
கொள்ளையடிக்கப்பட்டுள்ள மாணிக்கக்கல்லின் பெறுமதி சுமார் நான்கு இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரே இரவில் விகாரை மற்றும் அம்மன் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமையால், அவர்கள் ஒரே குழுவினராக இருக்கலாம் எனப் கலஹா பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் மோப்ப நாய்களின் உதவியுடன் கொள்ளையர்களைக் கைது செய்யப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று காலை கண்டி பொலிஸ் பிரிவில் உள்ள கைரேகை நிபுணர்கள் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல்களை சேகரித்து சென்றனர்.
தொடர்ந்து கலஹா பொலிசார் சம்பவ பற்றி விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

